ஆசிய தரவரிசை பட்டியல்: அண்ணா பல்கலைக்கு 204வது இடம்

2

சென்னை : கியூ.எஸ்., நிறுவனம் வெளியிட்ட, பல்கலைகளுக்கான ஆசிய தரவரிசை பட்டியலில், இந்திய பல்கலை.கள், கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் சறுக்கல்களை சந்தித்துள்ளன. தமிழகத்தின் அண்ணா பல்கலை, 177வது இடத்தில் இருந்து, 204வது இடத்துக்கு பின் தங்கியுள்ளது.


உலகின் சிறந்த பல்கலை.களின் கற்றல், கற்பித்தல், ஆராய்ச்சி செயல்பாடுகளை, பிரிட்டன் நாட்டில் உள்ள லண்டனை சேர்ந்த கியூ.எஸ்., எனும் 'குவாக்கரெல்லி சைமண்ட்ஸ்' என்ற நிறுவனம் ஆய்வு செய்து வருகிறது. அதன் அடிப்படையில், ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு தலைப்புகளில், பல்கலை.களின் தரவரிசை பட்டியலை வெளியிடுகிறது.


அந்த வகையில், ஆசிய அளவிலான சிறந்த பல்கலை.கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், இந்திய பல்கலை.கள் கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் சறுக்கல்களை சந்தித்துள்ளன. இந்த ஆசிய பல்கலை தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்களை, சீனா, சிங்கப்பூர், மலேசியா நாடுகளைச் சேர்ந்த பல்கலை,கள் பிடித்துள்ளன.


முதல் 100 இடங்களில், இந்தியாவைச் சேர்ந்த ஏழு கல்வி நிறுவனங்கள் இடம் பிடித்துள்ளன. இந்த பட்டியலில், ஐ.ஐ.டி., டில்லி 59வது இடம் பிடித்தது. கடந்த ஆண்டு 44வது இடம் பிடித்திருந்தது. கடந்த ஆண்டு 62வது இடத்தில் இருந்த பெங்களூரு ஐ.ஐ.எஸ்., நடப்பாண்டு 64வது இடம்; 56வது இடம் பிடித்திருந்த சென்னை ஐ.ஐ.டி., நடப்பாண்டு 70வது இடம் பிடித்துள்ளது.


இதுதவிர, மும்பை ஐ.ஐ.டி., - ஐ.ஐ.டி., கான்பூர், ஐ.ஐ.டி., கரக்பூர், டெல்லி பல்கலைகள் கடந்த ஆண்டை காட்டிலும், நடப்பாண்டு தரவரிசையில் பின்தங்கி உள்ளன. தமிழகத்தை பொறுத்தவரை, மாநில பல்கலையான அண்ணா பல்கலை, கடந்த ஆண்டு 177வது இடம் பிடித்திருந்தது. நடப்பாண்டு, 204வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 280வது பட்டியலில் இருந்த அழகப்பா பல்கலை, நடப்பாண்டு 393வது இடத்துக்கு சரிந்துள்ளது. தனியார் பல்கலைகளான, வி.ஐ.டி., 156; எஸ்.ஆர்.எம்., 226வது இடங்களை பிடித்துள்ளன.

Advertisement