இந்திய அணியில் மீண்டும் ரிஷாப் * தென் ஆப்ரிக்க டெஸ்ட் தொடரில் இடம்

புதுடில்லி: இந்திய டெஸ்ட் அணியில் மீண்டும் இடம் பிடித்தார் ரிஷாப் பன்ட். தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான தொடரில் துணைக் கேப்டனாக தேர்வானார்.
இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி, இரண்டு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் நவ. 14-18ல் கோல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்க உள்ளது. இரண்டாவது டெஸ்ட் (22-26) கவுகாத்தியில் நடக்கும். இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது.
ரிஷாப் இடம்
கேப்டனாக சுப்மன் கில் தொடர்கிறார். கடந்த ஜூலை மாதம் நடந்த, மான்செஸ்டர் டெஸ்டில், இங்கிலாந்தின் வோக்ஸ் வீசிய பந்தில், ரிஷாப் பன்ட் வலது கால் பாதத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதில் இருந்து மீண்ட ரிஷாப், தென் ஆப்ரிக்க 'ஏ' அணிக்கு எதிரா பெங்களூரு போட்டியில் 17, 90 ரன் எடுத்து, வெற்றிக்கு உதவினார்.
இதையடுத்து மீண்டும் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்ட ரிஷாப், மறுபடியும் துணைக் கேப்டனாக செயல்பட உள்ளார்.
முதுகுப்பகுதி காயத்தில் இருந்து மீண்ட வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் சேர்க்கப்பட்டார். வெஸ்ட் இண்டீசிற்கு எதிரான டெஸ்ட் அணியில் இடம் பெற்றிருந்த தமிழகத்தின் ஜெகதீசன், பிரசித் கிருஷ்ணா நீக்கப்பட்டனர்.
அணி விபரம்:
சுப்மன் கில் (கேப்டன்), ரிஷாப் பன்ட் (துணைக் கேப்டன்), ஜெய்ஸ்வால், ராகுல், சாய் சுதர்சன், தேவ்தத் படிக்கல், துருவ் ஜுரெல், ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், பும்ரா, அக்சர் படேல், நிதிஷ் குமார், முகமது சிராஜ், குல்தீப், ஆகாஷ் தீப்.

திலக் வர்மா கேப்டன்
இந்தியா 'ஏ', தென் ஆப்ரிக்க 'ஏ' அணிகள் மூன்று ஒருநாள் (நவ. 13, 16, 19, இடம்: ராஜ்கோட்) போட்டிகளில் மோத உள்ளன. இதற்கான இந்திய 'ஏ' அணி கேப்டனாக திலக் வர்மா, துணைக் கேப்டனாக ருதுராஜ் நியமிக்கப்பட்டனர்.
அணி விபரம்:
திலக் வர்மா (கேப்டன்), ருதுராஜ், அபிஷேக் சர்மா, ரியான் பராக், இஷான் கிஷான், ஆயுஷ் படோனி, நிஷாந்த் சிந்து, விப்ராஜ், மானவ் சுதர், ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, கலீல் அகமது, பிரப்சிம்ரன் சிங்.

'ஏ' அணியில் குல்தீப்
இந்தியா 'ஏ', தென் ஆப்ரிக்க 'ஏ' அணிகள் மோதும் அதிகாரப்பூர்வமற்ற இரண்டாவது டெஸ்ட் (4 நாள்) இன்று பெங்களூருவில் துவங்குகிறது. தென் ஆப்ரிக்க தொடருக்கு தயாராகும் வகையில், இன்று கேப்டன் ரிஷாப்புடன், குல்தீப், ஆகாஷ் தீப், முகமது சிராஜ் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

Advertisement