கொலை முயற்சி வழக்கில் தண்டனை ஒத்திவைப்பு
புதுடில்லி: கொலை முயற்சி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளி என தீர்ப்பளித்த நீதிமன்றம், தண்டனை விவரங்களை விரைவில் அறிவிப்பதாக கூறியுள்ளது.
புதுடில்லி தாப்ரி விரிவாக்கம் அருகே உள்ள ஒரு அலுவலத்தில் வேலை பார்க்கும் ஜக்கி, 2018ம் ஆண்டு நவ., 25ம் தேதி மாலையில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, அவரை மறித்த முஹமது சலீம், செங்கல்லால் ஜக்கியை தாக்கினார்.
மேலும், கத்தியால் ஜக்கியில் முகத்தில் சரமாரியாக குத்தினார். அலறியடித்து ஓடிய ஜக்கியை, பொதுமக்கள் காப்பாற்றி, மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்த போலீசார், தப்பி ஓடிய முஹமது சலீமை தீவிர தேடுதலுக்குப் பின் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு, மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி தீரேந்திர ராணா முன், அக். 28ம் தேதி விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
காயத்தின் தன்மை மற்றும் ஆயுதங்கள் அரசுத் தரப்பில் சமர்ப்பிக்கப்பட்டு, சந்தேகத்துக்கு இடமின்றி குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. பாதிக்கபட்ட ஜக்கிக்கு ஏற்பட்ட காயங்கள், அவரது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் விதமாக இருந்ததையும் அரசு தரப்பு தெளிவாக நிரூபித்துள்ளது.
அவரை கொலை செய்யும் நோக்கத்தோடு தாக்குதல் நடத்திய முஹமது சலீம் குற்றவாளி என அறிவிக்கப்படுகிறது. தண்டனை விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் போது, தண்டனை அறிவிக்கப்படும் என அரசு வழக்கறிஞர் கூறினார்.