சீமான் வீட்டிற்கு மீண்டும் மிரட்டல்

சென்னை: நா.த.க., தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள் குறித்து, 'சைபர்' குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சென்னை நீலாங்கரையில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீடு உள்ளது. இவரது வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக, அக்டோபரில் மர்ம நபர்கள், டி.ஜி.பி., அலுவலகத்திற்கு அனுப்பிய 'இ - மெயிலில்' மிரட்டல் விடுத்து இருந்தனர்.

உடனடியாக நீலாங்கரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் நடத்திய சோதனையில், புரளி என தெரிய வந்தது. இது தொடர்பாக, நீலாங்கரை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

தற்போது அதே பாணியில், சீமான் வீட்டிற்கு மர்ம நபர்கள் நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். சோதனையில், இந்த மிரட்டலும் புரளி என தெரிய வந்துள்ளது.

கடந்த சில மாதங்களாக, மர்ம நபர்கள் தொடர்ச்சியாக சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், மருத்துவமனைகள், பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வருகின்றனர். இது குறித்து, சைபர் குற்றப்பிரிவு போலீசாரும் விசாரித்து வருகின்றனர். ஆனால், இன்னும் மர்ம நபர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

Advertisement