603 கிலோ போதை பொருள் அழிப்பு

ஆவடி: ஆவடி போலீஸ் கமிஷனரகத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்களில், பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான 603 கிலோ போதை பொருட்கள் நேற்று அழிக்கப்பட்டன.

ஆவடி போலீஸ் கமிஷனரகத்தில், காவல் நிலையங்கள் மற்றும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் 227 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை அழிக்க, நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

அதன்படி 600 கிலோ கஞ்சா, 3 கிலோ கஞ்சா சாக்லேட், 19,000 போதை மாத்திரை மற்றும் 'மெத் ஆம்பெட்டமைன்' உள்ளிட்ட 60.37 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 603 கிலோ போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

அவற்றை, செங்கல்பட்டு மாவட்டம், தென்மேல்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள ஜி.ஜே.மல்டி கிளேவ் என்ற தனியார் நிறுவனத்தில் உள்ள 'இன்சுலேட்டர்' இயந்திரத்தில் கொட்டி நேற்று அழிக்கப்பட்டது.

கடந்தாண்டு, 112 வழக்குகளில் 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான கஞ்சா மற்றும் இந்தாண்டு இதுவரை 491 வழக்குகளில் 2.39 கோடி ரூபாய் மதிப்பிலான 2,382 கிலோ கஞ்சா அழிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement