கோவையில் தொடர் சம்பவங்கள்: பெண்களுக்குப் பாதுகாப்பு துளியளவும் இல்லை; நயினார் குற்றச்சாட்டு

12


கோவை: ''விமான நிலையம் அருகில் பாலியல் வன்கொடுமை, பரப்பரப்பான சாலையில் கடத்தல் எனக் கோவையில் தொடர்ந்து நடக்கும் சம்பவங்களைப் பார்க்கும்போது திமுக ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு துளியளவும் இல்லை'' என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

அவரது அறிக்கை:
தென்னகத்தின் Manchester-ஐ பெண்களை சூறையாடும் Monster-கள் உலவும் பகுதியாக மாற்றியது தான் திமுக-வின் சாதனை. தேசத்தையே உலுக்கச் செய்த கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை நடந்து மூன்று நாட்களுக்கு உள்ளாகவே கோவை இருகூரில் அலறல் சத்தத்துடன் ஒரு பெண் கடத்தப்படும் சிசிடிவி பதிவு வெளியாகியுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.



தமிழக போலீசார் திமுகவின் ஏவல்துறையாக செயல்படாமல், உடனடியாக இவ்விஷயத்தில் தலையிட்டு கடத்தப்பட்ட பெண்ணை மீட்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். விமான நிலையம் அருகில் பாலியல் வன்கொடுமை, பரப்பரப்பான சாலையில் கடத்தல் எனக் கோவையில் தொடர்ந்து நடக்கும் சம்பவங்களைப் பார்க்கும்போது திமுக ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு என்பது துளியளவும் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.


திறனற்ற நிர்வாகத்தையும், சீரழிந்த சட்டம் ஒழுங்கையும் வைத்துக் கொண்டு எத்தனைக் குற்றவாளிகளைச் சுட்டுப் பிடித்து பெண்களைக் காப்பாற்ற போகிறீர்கள் முதல்வர் ஸ்டாலின். வாயால் வடைசுட்டு பெண்களைக் கயமைக் கழுகுகளிடம் பலிகொடுக்கும் திமுக அரசை நாடு போற்றும் நல்லாட்சி என்று கூறும் அவலத்தை வேறு கேட்க நேருவது பெரும் சாபக்கேடு. இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

Advertisement