இந்தியாவை சுற்றிய டிரைசைக்கிள் நண்பர்கள்

''ப ள்ளி, கல்லுாரியில் கிடைக்கும் நட்புகள் வேலைக்கு சென்றதும் காணாமல் போய்விடும். ஆனால் இரு நண்பர்கள் ஒன்றாக சேர்ந்தால் எதில் வேண்டுமானாலும் வெற்றி பெற முடியும் என்பது நாங்கள் உதாரணம்,'' என்கின்றனர் டிரைசைக்கிளில் இந்தியா முழுவதும் பயணித்து சாதித்த நண்பர்கள் சிராஜூதின், அருண்குமார்.

அவர்கள் கூறியது: மதுரையை சேர்ந்த நாங்கள் வெவ்வேறு பள்ளிகளில் பிளஸ் 2 படித்தாலும் பொதுத் தேர்வின் போது சந்தித்து பழகி நண்பர்களானோம். இருவருக்கும் பயணம் செய்ய ஆசை இருந்தது. டிரைசைக்கிளில் துவக்க அருணுக்கு யோசனை தோன்றியது.

மனிதநேயம், பாலியல் வன்கொடுமை தடுப்பு, போதை விழிப்புணர்வு, புவி வெப்பமயமாதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, சுவர் ஓவியங்கள் மூலமாக தெரியப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பயணத்தை துவங்கினோம்.

டிரைசைக்கிளில் பெட், டெண்ட், உணவுப்பொருள், ஆடைகள், காஸ், மின் அடுப்பு, கிரிக்கெட் பேட், இறகுபந்து, கேமரா, லேப்டாப் உள்ளிட்ட பொருட்களுடன் 2023 ஜூன் 7ல் பயணத்தை துவங்கினோம்.

கேரளா, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப் வழியாக ஜம்மு காஷ்மீர், லடாக், ஹிமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் சென்றோம். ஹிந்தி, ஆங்கிலம் தெரிந்ததால் பிற மாநில மக்களுடன் கலந்துரையாட முடிந்தது.

உள்ளூர் மக்களின் வீடு, டீக்கடை, தாபா அருகே டெண்ட் அமைத்து இரவு தங்கினோம்.

ராஜஸ்தானில் குளிர்காலத்தில் பயணித்திருந்ததால் காஷ்மீர், லடாக்கில் குளிர் உடலுக்கு ஒத்துப்போனது. மலையேற்றத்தில் சுவாசித்தல் பிரச்னை ஏற்பட்ட போது டூவீலர் ரைடர்கள் உயரத்திற்கு செல்ல உதவினர்.

லடாக்கில் 19 ஆயிரத்து 300 அடி உயரமான சீன எல்லைக்கு அருகே அமைந்துள்ள 'உம்லிங் லா' பகுதிக்கு சென்று தேசியக்கொடியை நிறுவியது, 17,582 அடி உயரமான 'கர்துங் லா' பகுதிக்கு சென்றது மறக்க முடியாத அனுபவம்.

பஹல்காம் தாக்குதல் சம்பவம் நடந்த போது அருகே தங்கி இருந்தோம். இந்த சம்பவத்திற்கு பிறகு யுடியூபர்கள் என அறிந்து தங்குவதற்கு இடமளிக்க தயங்கினார்கள்.

'7 சிஸ்டர்ஸ் ஆப் இந்தியா' என்னும் வடகிழக்கு மாநிலங்களுக்கு சென்றோம். மேகாலயாவில் அதிக மழை பெய்யும் என்பதால் டெண்ட் அமைத்து தங்க முடியாத நிலை ஏற்பட்ட போது உள்ளூர் வாசிகள் இடமளித்தனர். ஜார்க்கண்ட், ஒரிசாவில் மாவோயிஸ்ட், நக்சலைட் கும்பலிடம் சிக்கிய போது தப்பிக்க உள்ளூர் மக்கள் உதவினர். உத்தரபிரதேசம், பீகாரில் திருடர்கள் வழிமறித்து பொருட்களை திருடினர்.

அனைத்து மாநிலங்களில் வசிக்கும் தமிழர்கள் எங்கள் பயணத்தொடர்களை யுடியூப்பில் பார்த்ததால் வீடுகளுக்கு விருந்தாளிகளாக அழைத்து சென்றனர். அந்தந்த பகுதி பழங்கள், காய்கறிகளை சமையலில் பயன்படுத்தி, இறைச்சி உண்பதை பெரும்பாலும் தவிர்த்தோம்.

பள்ளி மாணவர்களுக்கு நோட்டு, புத்தகங்கள் வழங்கினோம். 2 ஆயிரம் மரக்கன்றுகளை நடவு செய்தோம். குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான், காஷ்மீர், லடாக்கில் 20 இடங்களில் மரக்கன்றுகளை நடவு செய்து, உள்ளூர் மக்களின் ஒத்துழைப்புடன் தற்போதும் பராமரித்து வருகிறோம்.

இருவரும் பரஸ்பர ஆதரவுடன் இருந்ததால் தொடர்ந்து இரண்டரை ஆண்டுகள் பயணித்து நாடு முழுவதும் வெற்றிக்கரமாக சுற்றி வர முடிந்தது. நடிகர் விஜய்சேதுபதி, அவரின் வீட்டிற்கு அழைத்து பாராட்டி, பயணம் குறித்து கேட்டறிந்தார் என்றனர்.

Advertisement