டீக்கடைகள், தெருமுனைகளில் எஸ்.ஐ.ஆர். விண்ணப்பம் விநியோகம்; 8 அதிகாரிகளுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ்

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் எஸ்.ஐ.ஆர். பணியின் போது, வாக்காளர் படிவங்களை டீக்கடைகளில் உட்கார்ந்து விநியோகித்த 8 அதிகாரிகளுக்கு விளக்கம் கேட்டு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணி( SIR) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணியின் போது வாக்காளர்கள் நிலையை துல்லியமாக அறிந்து கொள்ள, அவர்களின் வீடுகளுக்கே அதிகாரிகள் செல்ல வேண்டும். அங்கே வாக்காளர் விண்ணப்ப படிவங்களை தரவேண்டும் என்று தேர்தல் கமிஷன் வழி காட்டுதல்களை வெளியிட்டு உள்ளது.

இந் நிலையில், மேற்கு வங்கத்தில் வழிகாட்டுதல்களை மீறியதாக 8 ஓட்டுச்சாவடி அதிகாரிகளுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. அதிகாரிகள் வீடு, வீடாகச் சென்று வாக்காளர் படிவங்களை வழங்கி, அவர்களின் விவரங்களை சேகரிக்க வேண்டும்.

ஆனால், கூச் பேஹர், வடக்கு 24 பர்கானாஸ் பகுதிகளில் ஓட்டுச்சாவடி நிலைய அதிகாரிகளில் சிலர் வீடுகளுக்கு செல்லவில்லை. மாறாக உள்ளூரில் உள்ள டீக்கடைகளிலும், தெரு முனைகள், பள்ளிவாயில்கள் முன்பாக இருந்தவாறே வாக்காளர்களுக்கு படிவங்களை வழங்கி இருக்கின்றனர்.

இந்த விவரங்கள் அனைத்தையும், தேர்தல் கமிஷனுக்கு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் புகார்களாக அனுப்பி உள்ளனர். இதையடுத்து, சம்பந்தப்பட்ட ஓட்டுச்சாவடி நிலைய அதிகாரிகள் 8 பேர் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.

இதுகுறித்து மாநில தேர்தல் அதிகாரிகள் கூறுகையில், ஓட்டுச்சாவடி நிலைய அதிகாரிகளின் இந்நடவடிக்கை தேர்தல் கமிஷனுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. எஸ்ஐஆர் பணிகள் உரிய முறையில் நடக்கிறதா என்பதை மாவட்ட கலெக்டர்கள் கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறோம்.

ஓட்டுச்சாவடி நிலைய அதிகாரிகள், வாக்காளர்களின் வீடுகளுக்குச் செல்கிறார்களா? இல்லையா? என்பதை கலெக்டர்கள் கண்காணிக்க வேண்டும் என்றனர்.

Advertisement