பல கோடி மக்களின் ஓட்டுரிமை கேள்விக்குறி: முதல்வர் ஸ்டாலின்

55


சென்னை: வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி காரணமாக, பல கோடி மக்களின் ஓட்டுரிமை கேள்விக்குறியாகி உள்ளது என முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டி உள்ளார்.


வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கு எதிராக, தி.மு.க., தொடர்ந்த வழக்கு விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் வரும் நவ., 11ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் குறித்து ஆலோசிக்க, மாவட்டச் செயலர்கள் கூட்டத்தை தி.மு.க., இன்று நடத்தியது. வரும் 11ம் தேதி, தேர்தல் கமிஷனை கண்டித்து, தி.மு.க., கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டமும் நடத்துகின்றன.

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தி.மு.க., மாவட்டச் செயலர்கள் கூட்டம், இன்று 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடந்தது. இதில் மாவட்டச் செயலர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், தொகுதி பார்வையாளர்கள் பங்கேற்றனர். இந்த ஆலோசனை தொடர்பாக சமூக வலைதளத்தில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:



தமிழகத்தை எஸ்.ஐ.ஆர்., ஆபத்து சூழ்ந்துள்ளது. பல கோடி மக்களின் ஓட்டுரிமை கேள்விக்குறியாகி உள்ளது. நம் மக்களின் ஓட்டுரிமையைப் பாதுகாக்க, கட்சியினர் கண்ணும் கருத்துமாக இருந்து மேற்கொள்ள வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்தும், வரும் 11ம் நாள் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் எஸ்.ஐ.ஆர்.,க்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டங்களைக் கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து வெற்றிகரமாக நடத்திடவும்,இன்றைய மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அறிவுறுத்தல்களை வழங்கினேன்.



சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் எனும் சதி வலையில் சிக்காமல் நம் மக்களைக் காக்க வேண்டிய பொறுப்பு கட்சி நிர்வாகிகள் ஒவ்வொருவருக்கும் உள்ளது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பை பலப்படுத்துவோம், கடமையாற்றுவோம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

வீடியோ வெளியீடு



எஸ்.ஐ.ஆர்-ஐ ஏன் எதிர்க்கிறோம்? என முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: நமது தொடர் எதிர்ப்புகளை மீறி, எஸ்.ஐ.ஆர் பணிகள் தொடங்கி உள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் குறித்து மக்கள் நிறை பேருக்கு இன்னமும் முழுசாக தெரியலவில்லை.


@quote@இந்நிலையில எஸ்ஐஆர்.,ஐ திமுக ஏன் எதிர்க்கிறோம் என்பதை விளக்கவும் நமது ஓட்டுரிமையை எப்படி பாதுகாத்துக் கொள்வது என்று வழிகாட்டவும் தான் இந்த வீடியோ. quote

சரியான உண்மையான வாக்காளர் பட்டியல் தான் நியாயமான தேர்தலுக்கு அடிப்படை. எனவே வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யப்படுவதை நாங்கள் எதிர்க்கவில்லை.

கால அவகாசம்



ஆனால் போதுமான கால அவகாசம் தராமல் தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் இதை அவசர, அவசரமாக செய்துவது சரியாக இருக்காது என்பது தான் எங்களது நிலைப்பாடு. தேர்தல் கமிஷனுடன் கூட்டு சேர்ந்து வாக்காளர் பட்டியலை பாஜ எப்படியெல்லாம் மோசடி பண்ணி இருக்குன்னு லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி ஏற்கனவே விளக்கி இருக்கிறார். எஸ்ஐஆர் நடைமுறைக்கு வழங்கும் கணக்கீட்டு படிவத்தில் பிரச்னைகள், குழப்பங்கள் உள்ளன. கணக்கீட்டுப் படிவத்தில் வாக்காளர் உறவினர்கள் பெயர் கேட்கப்பட்டு உள்ளது.

இடியாப்பச் சிக்கல்



உறவினர் என்றால் யார்? அனைவரும் தானே வாக்காளர் பட்டியலில் இருப்பார்கள். விண்ணப்பிக்கும் வாக்காளர் பெயரா? உறவினர் பெயரா? யார் பெயரை முதலில் எழுத வேண்டும்.


@quote@சிறிய தவறு இருந்தாலும் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயரை நீக்கும் ஆபத்து இருக்கிறது. quote

நன்றாக படித்தவர்களுக்கே இந்த கணக்கீட்டு படிவத்தை பார்த்தால் தலை சுற்றிவிடும். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்பது இடியாப்பச் சிக்கல் போன்றது. வாக்காளர் கணக்கீட்டு படிவத்தில் புகைப்படத்தை ஒட்டுவதில் கூட குழப்பம் இருக்கிறது.

அதிமேதாவிகள்



எதிர்க்கட்சிகளின் சில அதிமேதாவிகள் புரிதலற்ற வகையில் உண்மைக்கு புறம்பாக பேசுகின்றனர். ஏழை மக்களின் ஓட்டுரிமையை நீக்கிவிடலாம் என எதிர்க்கட்சிகள் நினைக்கின்றன. கணினிமயமாக்கும் பணிகளை முடித்து டிசம்பர் 7ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட வேண்டும்.


சமர்ப்பித்ததற்கான ஒப்புகைச் சீட்டையும் வாக்காளர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும். தேர்தல் கமிஷனின் வாக்காளர் பட்டியல் திருத்தம் படிவத்தை பூர்த்தி செய்வதில் சந்தேகம் எழுந்தால் திமுக சார்பிலான உதவி எண் 8065420020 தொடர்பு கொண்டு வழிகாட்டுதல்களை பெறலாம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement