தென்னாப்ரிக்காவில் நடக்கும் ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி

6


வாஷிங்டன்: தென்னாப்ரிக்காவில் நடைபெறும் 'ஜி - 20' உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.


பொருளாதார ஒத்துழைப்புக்கான ஜி - 20 அமைப்பில், இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட உலகின் 20 முன்னணி நாடுகள் உள்ளன. கடந்தாண்டு டிசம்பரில் இருந்து ஓராண்டுக்கு இதன் தலைமை பொறுப்பு தென்னாப்ரிக்காவின் வசமானது. நடப்பாண்டுக்கான ஜி - 20 உச்சி மாநாடு, வரும் நவம்பர் 22 மற்றும் 23ம் தேதிகளில் தென்னாப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற உள்ளது.

தென்னாப்ரிக்க அரசுக்கும், டிரம்புக்கும் ஆரம்பம் முதலே ஒத்துப்போகவில்லை. தென்னாப்ரிக்காவில், வெள்ளை இன விவசாயிகளுக்கு அநீதி இழைக்கப்படுகிறது என்று டிரம்ப் குற்றம் சாட்டினார். வெள்ளை மாளிகைக்கு வந்த தென்னாப்ரிக்க அதிபர் மற்றும் அமைச்சர்களை, டிரம்ப் அவமதித்து விட்டதாகவும் புகார்கள் எழுந்தன.
இதனால் இரு நாட்டு உறவுகள் சீர்குலைந்துள்ளன.



இந்நிலையில் தென்னாப்ரிக்காவில் நடக்கும் ஜி 20 உச்சி மாநாட்டில் பங்கேற்கப் போவதில்லை என டிரம்ப் அறிவித்து இருக்கிறார். அதிபர் டிரம்ப் இல்லாத இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி நிச்சயம் பங்கேற்பார் என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். மலேசியாவின் கோலாலம்பூரில் சமீபத்தில் நடந்த ஆசியான் உச்சி மாநாட்டில் டிரம்ப் பங்கேற்ற நிலையில், மோடி அதில் பங்கேற்காமல் தவிர்த்து விட்டார்.


இந்தியா - பாக்., சண்டையை நிறுத்தியது குறித்தும், ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவது பற்றியும், டிரம்ப் தன்னிச்சையாக, தவறான தகவல்களை தொடர்ந்து பேசியும் பதிவிட்டும் வருகிறார். அதை பல முறை மத்திய அரசு மறுத்தும் விட்டது. எனினும் டிரம்ப் தன் பேச்சை தொடர்ந்து கொண்டே இருக்கிறார். இந்த சூழலில், அதிபர் டிரம்ப் உடன் நேரடியான சந்திப்பை மத்திய அரசு விரும்பவில்லை.


ஒரு வேளை சந்திக்கும் பட்சத்தில், தனது தம்பட்டம் அடிக்கும் பேச்சுக்கு வலு சேர்ப்பதாக, அதை டிரம்ப் பயன்படுத்திக் கொள்வார். அதை தவிர்க்கவே கோலாலம்பூர் மாநாட்டை பிரதமர் தவிர்த்து விட்டார் என்று தகவல்கள் வெளியாகின. இத்தகைய பின்னணியில், தென்னாப்ரிக்காவில் நடக்கும் மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி நிச்சயம் பங்கேற்பார் என்று சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Advertisement