உத்தராகண்டிற்கு ரூ.8,260 கோடியில் வளர்ச்சி திட்டம்; வெள்ளி விழாவில் பிரதமர் மோடி பரிசு

5


டேராடூன்: உத்தராகண்ட் மாநிலத்தின் 25வது ஆண்டு நிறுவன விழாவில், ரூ.8,260 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார்.


நவம்பர் 9ம் தேதி 2000ம் ஆண்டு உத்தரபிரதேசத்தில் இருந்து உத்தராகண்ட் பிரிக்கப்பட்டு இந்தியாவின் 27வது மாநிலமாக உருவாக்கப்பட்டது. இந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் மாநிலத்தின் நிறுவன நாளாக கொண்டாடப்படுகிறது.


அதன் வெள்ளி விழாவைக் கொண்டாடும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். ரூ.8,260 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார். பின்னர் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:


உத்தராகண்ட் மாநில பட்ஜெட் 25 ஆண்டுக்கு முன் ரூ.4,000 கோடியாக இருந்தது, இப்போது ரூ.1 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. கடந்த 25 ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் அனைத்து விதமான முன்னேற்றங்களையும் அடைந்துள்ளது. உத்தராகண்டின் உண்மையான சக்தி அதன் ஆன்மிக பலம்.


உலகின் ஆன்மிக தலைநகராக மாற முடியும். உத்தராகண்டில் ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்களுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த மாநிலத்தை புதிய உயரத்திற்கு கொண்டு செல்ல இரட்டை இன்ஜின் பாஜ அரசு பாடுபடுகிறது.

மாநில இளைஞர்கள் மற்றும் தொழில்முனைவோருடன் நான் கலந்துரையாடினேன். மாநிலத்தின் வளர்ச்சி குறித்து அனைவரும் உற்சாகமாக உள்ளனர். 25 ஆண்டுகளுக்கு முன்பு, 6 மாத காலத்திற்குள் 4,000 சுற்றுலாப் பயணிகள் விமானம் மூலம் உத்தராகண்டிற்கு வருகை தந்தனர்.


இன்று, தினமும் 4,000 சுற்றுலாப் பயணிகள் விமானம் மூலம் உத்தராகண்டிற்கு வருகிறார்கள். கடந்த 25 ஆண்டுகளில், பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 10 மடங்கு அதிகரித்துள்ளது. முன்பு, ஒரு மருத்துவக் கல்லூரி மட்டுமே இருந்தது; இன்று, 10 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Advertisement