தந்தையின் பிஸ்டலால் நண்பனை சுட்ட 17 வயது பள்ளி மாணவன்; முன் விரோதத்தால் விபரீதம்

குருகிராம்: குருகிராம் பகுதியில் தந்தையின் பிஸ்டல் துப்பாக்கியால் நண்பனை 17 வயது சிறுவன் சுட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இதுபற்றிய விவரம் வருமாறு;

புதுடில்லியை அடுத்த குருகிராம் பகுதி காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு தொலை பேசி அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய ஒருவர், செக்டர் 48 என்ற பகுதியில் சிறுவன் ஒருவன் துப்பாக்கியால் சுடப்பட்டதாக கூறினார். இதையடுத்து, போலீசார் ஒரு குழுவாக சம்பவ பகுதிக்கு விரைந்து சென்றனர்.

அப்போது துப்பாக்கியால் சுடப்பட்டு, படுகாயம் அடைந்த சிறுவன் முன்னதாக மருத்துவமனைக்கு அவனது குடும்பத்தினரால் அனுப்பி வைக்கப்பட்ட விவரம் தெரிந்தது. இதை தொடர்ந்து, சம்பவ பகுதியில் போலீசார் விசாரணை நடத்தினர்.

அங்கிருந்து பிஸ்டல் துப்பாக்கி, 5 தோட்டாக்கள் உள்ளிட்டவற்றை கண்டெடுத்தனர். இது தவிர, குற்றம்சாட்டப்பட்டவரின் வாடகை வீட்டில் சோதனை நடத்திய போது, அங்கு பயன்படுத்தப்படும் நிலையில் இருந்த 65 தோட்டாக்களையும் கைப்பற்றினர்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுவனின் தாயாரிடம் விசாரணை நடத்திய போது, தமது மகன் 11ம் வகுப்பு படிக்கிறார் என்றும், அவனை சக மாணவன் சந்திக்க விரும்புவதாகவும் அழைத்துள்ளார். ஆனால், முதலில் மறுத்த மாணவன், பின்னர் சம்பந்தப்பட்ட சக மாணவனை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்துள்ளான். அந்த மாணவனுடன் வேறு ஒரு மாணவனும் வந்துள்ளான். அடுத்த சில நிமிடங்களில் துப்பாக்கியை எடுத்து, சரமாரியாக அந்த மாணவனை சுட்டுள்ளார் என்று கூறி இருக்கிறார்.

தொடர் விசாரணையில் தந்தை ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதும், அவர் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து வந்து மாணவனை சுட்ட விவரமும் தெரிய வந்தது. மேலும், இரு மாணவர்களுக்கும் இடையே 2 மாதங்கள் முன்பு தகராறு ஏற்பட்டு இருப்பதையும் விசாரணையில் கண்டுபிடித்தனர். பின்னர், வழக்குப் பதிவு செய்து துப்பாக்கியால் சுட்ட மாணவனை போலீசார் கைது செய்தனர்.

Advertisement