ரஷ்ய சிறையில் தமிழக டாக்டர் சித்ரவதை; மத்திய, மாநில அரசுகளிடம் உதவி கோரும் மனைவி

சென்னை; ரஷ்யாவில் சிறைபிடிக்கப்பட்டு சித்ரவதைக்கு ஆளாகி வரும் தமது கணவரும், டாக்டருமான ஜெகதீஸ்வரனை மீட்டு தர உதவ வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு அவரது மனைவி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுபற்றிய விவரம் வருமாறு;

சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்தவர் யாமினி. இவரது கணவர் பெயர் ஜெகதீஸ்வரன். ,இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இவர்களில் ஜெகதீஸ்வரன், 2022ல் ரஷ்ய உக்ரைன் போருக்கு முன்பாக உக்ரைனில் மருத்துவம் பயின்றவர்.

படிப்பு முடிந்து சென்னை திரும்பிய அவர், யாமினியை திருமணம் செய்துகொண்டார். சில காலம் கழித்து சென்னையில் குடியேறினார். இந் நிலையில் செப்டம்பரில், ஜெகதீஸ்வரன், அவரது நண்பர் சேகருடன் ரஷ்யா சென்றுள்ளார். சோச்சி விமான நிலையம் சென்றவுடன், ஜெகதீஸ்வரன் உக்ரைனில் படித்தவர் என்பதை அறிந்த ரஷ்ய பாதுகாப்பு அதிகாரிகள், இருவரையும் தடுத்து, பின்னர் காவலில் வைத்ததாக தெரிகிறது. இருவரில் சேகர் மட்டும் 10 நாள் சிறைவாசத்துக்குப் பின்னர் வெளியில் விடுக்கப்பட்டுள்ளார்.

ஆனால் 43 நாட்கள் கழித்து ஜெகதீஸ்வரன் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதையடுத்து, அவர் இந்தியா திரும்ப விமானத்தை பிடிக்க வந்தபோது, அதே விமான நிலையத்தில் மீண்டும் அதே குடியேற்றத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

இந் நிலையில், தமது கணவரை மீட்டுத் தருமாறு மத்திய, மாநில அரசுகளை ஜெகதீஸ்வரன் மனைவி யாமினி கோரிக்கை வைத்து உள்ளார். அவர் மேலும் கூறியதாவது;

என் கணவர் ஆர்மினியாவில் உள்ள மருத்துவமனையில் பணிபுரிகிறார். 2022ம் ஆண்டு முதல் நானும், எனது கணவரும் அங்கு வசித்து வருகிறோம். 3 ஆண்டுகள் கழித்து சென்னையில் உள்ள எங்களது உறவினர்களை காண ஆகஸ்ட் மாதம் இங்கு வந்தோம். எனது ஊர் சென்னை. கணவர் திருவள்ளூரைச் சேர்ந்தவர்.

நாங்கள் இங்கு வந்தபோது, கணவரின் நண்பர் சேகர் கேட்டுக் கொண்டதின் பேரில், அவருடன் எனது கணவரும் சென்றுள்ளார். காரணம், எனது கணவருக்கு ரஷ்ய மொழி நன்றாக தெரியும். அந்த மொழியை சரளமாக பேசக்கூடியவர். செப்.15ல் சென்னையில் இருந்து சோச்சிக்கு விமானத்தில் புறப்படடனர்.

செப்.16ம் தேதி சோச்சியில் இறங்கியவுடன் குடியேற்றத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். கணவர் பாஸ்போர்ட், பிற ஆவணங்கள் மூலம், அவருக்கு ரஷ்ய மொழி தெரியும் என்பதை அறிந்து கொண்டனர். இருவரையும் கைது செய்தனர். நண்பர் சேகர் ஒருவாரம் கழித்து விடுவித்துள்ளனர்.

ஆனால் எனது கணவரை பிடித்து வைத்துக் கொண்டு கடுமையாக அடித்து உணவு, தண்ணீர் மறுத்து சித்ரவதை செய்தனர். என் கணவருக்கு ரஷ்ய மொழி தெரியும். ஆகையால் ரஷ்ய ராணுவத்தில் சேர வேண்டும் அல்லது 5 ஆண்டு சிறைவாசம் தரப்படும் என்று மிரட்டி வருகிறார்கள்.

அவரை விடுவிப்பதற்காக ரஷ்யாவில் ஒரு வக்கீலை வைத்தோம். ஆனால், அவரையும் அதிகாரிகள் மிரட்டி இருக்கின்றனர். ரஷ்யாவில் இருக்கும் இந்திய தூதரகத்தை பலமுறை அணுகியும் எந்த பதிலும் இல்லை.

டில்லியில் உள்ள வெளியுறவு தூதரகத்தையும் அணுகினோம். எந்த பதிலும் இல்லை. தமிழக பாஜ அலுவலகத்தில் மனுவும் கொடுத்து இருக்கிறேன்.

2 மாதங்களாக சென்னை கலெக்டர் அலுவலகத்திற்கு உதவி கேட்டு வருகிறேன். எனது கணவரை மீட்டுத் தர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு யாமினி கூறியுள்ளார்.

Advertisement