திமுகவை யாராலும் அழிக்க முடியாது: முதல்வர் ஸ்டாலின்

43


திருச்சி: எஸ்ஐஆர் என்ற ஆயுதத்தை எடுத்து திமுகவை அழிக்க நினைக்கிறார்கள். ஆனால் திமுகவை யாராலும் அழிக்க முடியாது என முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார்.


திருச்சியில் நடந்த ஸ்ரீரங்கம் எம்எல்ஏ பழனியாண்டி இல்ல திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: ஸ்ரீரங்கம் திமுகவின் கோட்டை. கடந்த 75 ஆண்டுகளாக சகோதரத்துவ உணர்வோடு நம் இயக்கத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். திமுகவை கழகத்தினர் கழகம் என்று மட்டும் அழைப்பதில்லை, இயக்கம் என்றும் அழைப்பது உண்டு. காரணம், இயக்கம் என்பது ஓய்வே இல்லாமல் உழைப்பது. அப்படியான இயக்கம் தான் நம் இயக்கம்.

திமுகவை இயக்கம் என்று சொல்வதால்தான் நமக்கு ஓய்வே இல்லை என்று கூறுகிறேன்.
சிறிய சிறிய தடைகளை பார்த்துக்கூட நமது திமுக இயக்கம் நின்றதே இல்லை.
தமிழகத்தில் எஸ்ஐஆர் மூலம் திமுகவை அழிக்க நினைக்கும் முயற்சி ஒருபோதும் எடுபடாது. எஸ்ஐஆர் குறித்து உள்ளபடி அக்கறை இருந்தால் அதிமுக முன்கூட்டியே வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும். ஆனால் திடீரென வழக்கு போடுவதற்கு காரணம் என்ன?



எஸ்ஐஆரை அதிமுக ஆதரித்துக் கொண்டிருக்கிறது. தேர்தல் கமிஷன், பாஜ எதை சொன்னாலும் அதை ஆதரிக்கும் மனநிலையில் தான் இபிஎஸ் இருந்து கொண்டு இருக்கிறார். எதிர்ப்பதற்கு துணிச்சல் இல்லை. நாம் தொடர்ந்து இருக்கும் வழக்கில், தங்களை இணைத்து கொண்டு இருக்கிறார் என்று சொன்னால், ஒரு கபட நாடகம் நடத்துவதற்கு திட்டமிட்டு இருக்கிறார்கள்.


டில்லியில் உள்ள பிக் பாஸ்க்கு பழனிசாமி ஆமா சாமி போட்டு தான் ஆக வேண்டும். எதிரிகள் புது, புது உத்திகளோடு நம்மை அழிக்க அவதாரம் எடுத்து வருகிறார்கள். சிபிஐ, வருமான வரித்துறை போன்ற ஆயுதங்களை எடுத்து மிரட்டி பார்த்தார்கள். ஒன்றும் செய்ய முடியவில்லை. இப்போது எஸ்ஐஆர் என்ற ஆயுதத்தை எடுத்து திமுகவை அழிக்க நினைக்கிறார்கள். ஆனால் திமுகவை யாராலும் அழிக்க முடியாது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

Advertisement