அந்த நாள் ஞாபகம்... * உலக விளையாட்டு செய்திகள்
பார்சிலோனா: அர்ஜென்டினா கால்பந்து அணி கேப்டன் மெஸ்ஸி 38. தனது 13 வயதில் (2000 முதல்), ஸ்பெயினின் பார்சிலோனா கிளப் அணியில் இணைந்தார். 2021ல் அந்த அணியில் இருந்து கண்ணீருடன் விடை பெற்றார். 2023 முதல் இன்டர் மயாமி அணிக்காக விளையாடுகிறார்.
சமீபத்தில் ஸ்பெயின் சென்ற மெஸ்ஸி, இரவில் திடீரென பார்சிலோனா அணியின் கேம்ப் நோவ் மைதானத்துக்கு 'விசிட்' அடித்து, பழைய நினைவுகளில் மூழ்கினார். இதுகுறித்து போட்டோ, வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அதில்,' நான் இழந்த ஒரு இடத்துக்கு, நேற்று இரவு முழு மனதுடன் திரும்பினேன். எல்லையில்லாத மகிழ்ச்சியில் திளைத்த இடம் இது,' என தெரிவித்துள்ளார். இம்மைதானத்தில் மெஸ்சி 373 கோல் அடித்துள்ளார்.
சின்னர் அபாரம்
டுரின்: இத்தாலியின் டுரின் நகரில், ஏ.டி.பி., பைனல்ஸ் டென்னிஸ் தொடர் நடக்கிறது. உலகத் தரவரிசையில் 'டாப்-8' பட்டியலில் உள்ள வீரர்கள் மட்டும், இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் லீக் முறையில் நடக்கின்றனர். 'பிஜோர்ன் போர்க்' பிரிவில் உலகின் 'நம்பர்-1' வீரர் இத்தாலியின் சின்னர், ஜெர்மனியின் ஜிவரேவ் உள்ளிட்டோர் உள்ளனர். இதன் முதல் போட்டியில் சின்னர், கனடாவின் பெலிக்சை 7-5, 6-1 என வென்றார்.
மெல்போர்ன் அணி கலக்கல்
மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் பெண்களுக்கான 'பிக் பாஷ்' தொடர் நடக்கிறது. மொத்தம் 8 அணிகள் லீக் முறையில் மோதுகின்றன. நேற்று மெல்போர்னில் நடந்த போட்டியில் சிட்னி தண்டர்ஸ், மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய சிட்னி அணி 20 ஓவரில் 148/7 ரன் எடுத்தது. மெல்போர்ன் அணி 18.1 ஓவரில் 151/6 ரன் எடுத்து 6 விக்கெட்டில் வெற்றி பெற்றது. தொடர்ந்து இரு வெற்றியுடன் பட்டியலில் (4 புள்ளி) முதலிடத்தில் உள்ளது.
* உலக செஸ் சாம்பியனுடன் குகேஷுடன் மோதும், வீரரை தேர்வு செய்யும் கேண்டிடேட்ஸ் தொடர், 2026, மார்ச் 28 முதல் ஏப்ரல் 16 வரை, சைப்ரஸ் தீவில் நடக்க உள்ளது. பெண்களுக்கான தொடரில் இங்கு நடக்கும்.
* உலக சாம்பியன் (50 ஓவர்) இந்திய பெண்கள் அணி, வரும் டிசம்பர் மாதம், சொந்தமண்ணில் வங்கதேசத்திற்கு எதிராக 3 ஒருநாள், 3 'டி-20' போட்டி கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது.
* பார்வையற்ற பெண்கள் அணிகள் பங்கேற்கும் 'டி-20' உலக கோப்பை தொடர் டில்லியில் நேற்று துவங்கியது. இந்திய அணி (3 ஓவர், 43/0) முதல் போட்டியில் இலங்கையை (13.3 ஓவர், 41/10) 10 விக்கெட்டில் வென்றது.
* சமீபத்தில் நடந்த உலக கோப்பை தொடரில் இந்திய பெண்கள் அணி சாம்பியன் ஆனது. இதில் விக்கெட் கீப்பர் பேட்டராக அசத்தியவர் மேற்குவங்கத்தின் ரிச்சா கோஷ். இவரை கவுரவிக்கும் வகையில் சிலிகுரியில் கட்டப்பட உள்ள கிரிக்கெட் மைதானத்துக்கு, 'ரிச்சா' பெயர் சூட்டப்பட்டது.
* பஹ்ரைனின் மனாமா நகரில் ஆண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் மணிஷ் சுரேஷ்குமார், 6-2, 2-6, 6-4 என ரஷ்யாவின் நெடெல்கோவை சாய்த்தார்.
* ஜப்பானில், 'சூப்பர் 500' அந்தஸ்து பெற்ற மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் நேற்று துவங்கியது. பெண்கள் ஒற்றையர் தகுதிச்சுற்றில் இந்தியாவின் 17 வயது நைய்ஷா கவுர், 17-21, 18-21 என்ற நேர் செட்டில் நியூசிலாந்தின் ஷவுன்னா லியிடம் வீழ்ந்தார்.
* இந்திய தடகள கூட்டமைப்பு சார்பில், முதன் முறையாக தேசிய உள்ளரங்கு சாம்பியன்ஷிப் போட்டி, வரும் ஜனவரி மாதம், ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடக்க உள்ளது.