தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிக்காக 5 கோடி விண்ணப்பங்கள் வினியோகம்

9

புதுடில்லி: தமிழகத்தில் 5 கோடியே 67 ஆயிரத்து 45 எஸ்ஐஆர் விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட்டு இருக்கின்றன என்று தலைமை தேர்தல் கமிஷன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் சரியான வாக்காளர்கள் யார் என்பதை கணக்கெடுக்கும் பணிகளை தேர்தல் கமிஷன் துரிதப்படுத்தி இருக்கிறது. அதன் முக்கிய கட்டமாக எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை தேர்தல் கமிஷன் அமல்படுத்தி உள்ளது.

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் நடைபெற்று 15 ஆண்டுகளை கடந்துவிட்டது. எனவே, வாக்காளர்கள் இடப்பெயர்ச்சி, அவர்களின் மரணம் ஆகியவற்றை கணக்கெடுத்து பட்டியலில் இருந்து நீக்கவும், 18 வயது நிரம்பியவர்களை புதிய வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

முதல் கட்டமாக பீஹாரில் இந்த பணிகள் தொடங்கின. தற்போது தமிழகம், மேற்கு வங்கம், உள்ளிட்ட பல மாநிலங்களில் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டு, சரியான வாக்காளர்களை கணக்கெடுக்கும் பணி வேகப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பணிகள் நவ.4ல் தொடங்கி டிச.4 வரை நடக்கிறது.

தற்போது இந்த பணிகள் தொடங்கி ஒரு வாரம் முடிந்துவிட்டது. எனவே எந்ததெந்த மாநிலங்களில் என்ன மாதிரியான பணிகள் நடைபெற்று வருகின்றன, வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு எத்தனை விண்ணப்ப படிவங்கள் வினியோகிக்கப்பட்டு உள்ளன என்ற விவரங்களை தேர்தல் கமிஷன் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது.

அதன்படி, தமிழகத்தில் மட்டும் 5 கோடியே 67 ஆயிரத்து 45 எஸ்ஐஆர் விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட்டு இருக்கின்றன. இந்த பணிக்காக 68,467 பூத் லெவல் அதிகாரிகள், 2,11,445 பூத் லெவல் முகவர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

அக்.27, 2025ம் ஆண்டு கணக்கீட்டின் தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 வாக்காளர் இருக்கின்றனர். இவர்களுக்காக 6 கோடியே 41 லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டு இருக்கின்றன. அவற்றில் இதுவரை 5 கோடியே 67 ஆயிரம் பேருக்கு விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட்டு இருக்கின்றன. அதாவது, விண்ணப்பங்களில் 78.09 சதவீதம் வினியோகிக்கப்பட்டு விட்டன.

மற்ற மாநிலங்களில் எஸ்ஐஆர் பணிகளுக்காக எத்தனை வாக்காளர் விண்ணப்ப படிவங்கள் அச்சடிக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு இருக்கின்றன என்ற விவரங்களையும் தேர்தல் கமிஷன் வெளியிட்டு இருக்கிறது.

அதில் அதிகபட்சமாக உ.பி.யில், 10 கோடியே 80 லட்சம் விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட்டுள்ளன. மேற்கு வங்கத்தில் 6 கோடியே 80 லட்சம் விண்ணப்பங்களும், மத்திய பிரதேசத்தில் 3 கோடியே 9 லட்சம் விண்ணப்பங்களும் வினியோகம் செய்யப்பட்டு உள்ளன.

Advertisement