செம்மொழி பூங்காவை திறக்க அரசு அவசரம்: நெருக்கடிக்கு இடையே வேலைபார்க்கும் அதிகாரிகள்

14

கோவை: கோவையில் உருவாக்கப்படும் செம்மொழி பூங்கா வேலைகள் இன்னும் முழுமையாக முடியவில்லை. இருப்பினும், இம்மாத இறுதியில் திறக்க அரசு தரப்பில் நிர்ப்பந்திப்பதால், நெருக்கடிக்கு இடையே அதிகாரிகள் வேலை பார்க்கின்றனர்.


கோவை காந்திபுரத்தில், 45 ஏக்கரில் செம்மொழி பூங்கா உருவாக்கப்பட்டு உள்ளது. 2024 அக். 6ல் முதல்வர் ஸ்டாலின் கோவை வந்திருந்தபோது, 2025 ஜூனில் செம்மொழி பூங்கா பயன்பாட்டுக்கு வரும் என அறிவித்தார்.போதுமான நிதி ஒதுக்காததால், தாமதமாகி வந்தது. கூடுதல் நிதி கேட்டும் கிடைக்கவில்லை. இச்சூழலில், உலக புத்தொழில் மாநாட்டை துவக்கி வைக்க, அக். 9ல் வந்திருந்த முதல்வர், 'செம்மொழி பூங்காவைஅடுத்த மாதம் (நவ.) திறந்து வைப்பேன்' என அறிவித்து விட்டார். ஆனால், பூங்கா பணிகள் இன்னும் முடியவில்லை.


முதல்வர் அறிவித்து விட்டார் என்பதற்காக, வரும் 26ல் வேறொரு நிகழ்ச்சிக்கு கோவை வரும் சமயத்தில், செம்மொழி பூங்காவை திறந்து வைக்கலாம் என திட்டமிட்டு, இதுதொடர்பான அறிவிப்பை, நேற்று முன்தினம் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி வெளியிட்டார்.


இன்னும் பணிகள் பாக்கியுள்ளதால், மாநகராட்சி அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.


கூடுதலாக ஊழியர்கள் நியமிக்கப்பட்டு, பணிகள் வேகப்படுத்தப்பட்டு வருகின்றன.10 நாட்களில் முடிக்க வேண்டும் என்பதால், நெருக்கடிக்கு மத்தியில் அலுவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.


இதற்கிடையே பூங்கா பணிகளை பார்வையிட அமைச்சர் நேரு நேற்று வந்தார். அவரும், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி உள்ளிட்டோரும், சுற்றிப்பார்த்தனர். நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் மதுசூதனன், கலெக்டர் பவன்குமார், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர், பூங்கா சிறப்புகளை விளக்கினர்.




@block_Bquote@ 'இன்னும் வேலை பாக்கியிருக்கு'quote நிருபர்களிடம் அமைச்சர் நேரு கூறுகையில், ''செம்மொழி பூங்காவை, இம்மாத இறுதியில் முதல்வர் திறந்து வைப்பார்; தேதியை முதல்வர் முடிவு செய்வார். இன்னும் சில வேலைகள் பாக்கி உள்ளன. இதற்காக ரூ.167.25 கோடி ஒதுக்கப்பட்டது. கூடுதலாக ரூ.47 கோடி கோரப்பட்டது. மொத்தம், ரூ.214.25 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. தமிழக அரசின் பங்களிப்பு தொகை வழங்கப்படும். 1,000 வகையான ரோஜாக்கள் உள்ளன. வேறென்ன செம்மொழி பூங்காவில் இருக்க வேண்டுமென எதிர்பார்க்கிறீர்கள்,'' என்றார்.block_B

Advertisement