தைவானுக்கு ஆதரவாக ஜப்பான் பிரதமரின் கருத்து; சீறிய சீனாவால் பரபரப்பு

2


டோக்கியோ: தைவானுக்கு எதிராக சீனா பலத்தைப் பயன்படுத்தினால் ஜப்பான் ராணுவ ரீதியாகத் தலையிடக்கூடும் என்று அந்நாட்டு பிரதமர் சனே டகாய்ச்சி எச்சரித்து இருந்தார். இவரது கருத்துக்களால் ஜப்பான்-சீனா உறவுகளில் விரிசல் ஏற்படும் என்ற அச்சம் ஏற்பட்டு இருக்கிறது.


சீனா, கிழக்கு ஆசிய நாடான தைவானை தன் நாட்டின் ஒரு பகுதியாக சொந்தம் கொண்டாடி வருகிறது. தைவானை ஒட்டிய கடல் பகுதியில் சீனா தொடர்ந்து ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த சூழலில், ஜப்பான் நாட்டின் முதல் பெண் பிரதமராக பதவி வகித்து வரும், சனே டகாய்ச்சி, "தைவானுக்கு எதிராக சீனா பலத்தைப் பயன்படுத்தினால் ஜப்பான் ராணுவ ரீதியாகத் தலையிடக்கூடும்" என திட்டவட்டமாக கூறியிருந்தார்.


இவரது கருத்துகளைத் தொடர்ந்து, சீனா தனது மக்களை ஜப்பானுக்குச் செல்ல கூடாது என அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக சீனா தனது நாட்டில் உள்ள ஜப்பான் தூதரை அழைத்து எச்சரித்துள்ளது. இதனால் 2012ம் ஆண்டுக்குப் பிறகு, சீனா- ஜப்பான் இடையே பெரிய அளவில் மோதல் ஏற்பட்டுள்ளது.


"ஜப்பானில் சீன மக்களின் தனிப்பட்ட பாதுகாப்பு மற்றும் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. சீன மக்கள் ஜப்பானுக்கு பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


சீனாவின் மூன்று பெரிய விமான நிறுவனங்களான ஏர் சீனா, சீனா சதர்ன் மற்றும் சீனா ஈஸ்டர்ன் ஆகியவை டிசம்பர் 31ம் தேதி வரை ஜப்பானுக்கு செல்லும் அனைத்து விமானங்களையும் ரத்து செய்திருக்கிறது. முன்பதிவு செய்திருந்த பயணிகளுக்கு முழுப் பணமும் திரும்ப வழங்கப்படும் என தங்கள் வலைத்தளங்களில் அறிக்கைகளை வெளியிட்டன. சீனா தைவான் மீது போர் விமானங்களை பறக்கவிட்டு அச்சுறுத்தி வரும் நிலையில் ஜப்பான் பிரதமரின் இந்த பேச்சு பதற்றத்தை அதிகரித்துள்ளது.

Advertisement