டிச.,2ல் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான பேச்சு போட்டி
கரூர், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியருக்கான பேச்சு போட்டி டிச.,2ல் நடக்கும் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது:
கரூர் கலெக்டர் அலுவலக வளாக கூடுதல் கட்டடத்தில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மகாத்மா காந்தி பிறந்தநாளை முன்னிட்டு, டிச., 2ல் பள்ளி, கல்லுாரி பேச்சு போட்டி நடக்கிறது. 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி காலை 9:30 மணி முதல் 1:00 மணி வரையிலும், கல்லுாரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி பிற்பகல் 1:30 மணி முதல் தொடங்கி நடைபெறும். வெற்றி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு, 5,000 ரூபாய்,- இரண்டாம் பரிசு, 3,000 ரூபாய்,- மூன்றாம் பரிசு, 2,000 ரூபாய்- வழங்கப்படும்.
இதில் இரு அரசு பள்ளி மாணவர்கள் தனியாக தேர்வு செய்து, ஒவ்வொருவருக்கும் சிறப்பு பரிசுத்தொகை, 2,000 ரூபாய் -வழங்கப்படும். கல்லுாரி மாணவர்களுக்கும் முதல் பரிசு, 5,000, இரண்டாம் பரிசு, 3,000,- மூன்றாம் பரிசு, 2,000 ரூபாய்- வழங்கப்படும். பேச்சு போட்டியில் காந்தியடிகள் நடத்திய தண்டியாத்திரை, வெள்ளையனே வெளியேறு இயக்கம், வட்ட மேசை மாநாட்டில் காந்தியடிகள் ஆகிய தலைப்புகளில் பள்ளி மாணவ, மாணவியர் பேசலாம். காந்தி கண்ட இந்தியா, வேற்றுமையில் ஒற்றுமை, மனித வாழ்க்கையும் காந்தியடிகளும் போன்ற தலைப்புகளில் கல்லுாரி மாணவர்கள் பேச வேண்டும். மேலும் விபரங்களுக்கு தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலக தொலைபேசி எண்- 04324 - 255077 ஐ தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர், கூறினர்.