3.38 லட்சம் சிறுமியருக்கு கருப்பைவாய் புற்றுநோய்: தடுப்பூசி அடுத்த மாதம் போட திட்டம்

சென்னை: “தமிழகத்தில் 3.38 லட்சம் சிறுமியருக்கு, கருப்பைவாய் புற்றுநோய் தடுப்பூசி போடும் திட்டம் அடுத்த மாதம் துவக்கப்படும்,” என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவ மனையில், 'உலக எய்ட்ஸ் தினம் - 2025' நிகழ்வு நேற்று நடந்தது.

நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் சுப்பிரமணியன் கூறியதாவது:

வரும் 2030ம் ஆண்டுக்குள், எச்.ஐ.வி., - எய்ட்ஸ் பாதிப்பு இல்லாத வகையில் தமிழகத்தை மாற்ற, பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் காரணமாக, தமிழகத்தில் எச்.ஐ.வி., தொற்றின் தாக்கம் குறைந்துள்ளது.

இந்தியாவின் எச்.ஐ.வி., பாதிப்பு, 0.23 சதவீதமாக இருக்கும் நிலையில், தமிழகத்தில் 0.16 சதவீதமாக உள்ளது.

தமிழகத்தில் அரசு பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும், 9 வயது முதல் 14 வயதுள்ள சிறுமியருக்கு, கருப்பைவாய் புற்றுநோய் பாதிப்பு வராமல் தடுக்க, தடுப்பூசி போடும் திட்டத்தை, அடுத்த மாதம் முதல்வர் துவக்க உள்ளார்.

கருப்பைவாய் புற்றுநோய் பாதிப்பு அதிகம் இருக்கும், அரியலுார், பெரம்பலுார், திருவண்ணா மலை, தர்மபுரி ஆகிய நான்கு மாவட்டங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

மாநிலம் முழுதும், 3.38 லட்சம் சிறுமியர் இத்திட்டத்தில் பயன் பெறுவர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement