மேற்கு வங்கத்தை ஆட்டுவித்த 'மெஸ்ஸி'மேனியா

3

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் லியோனல் மெஸ்ஸியை காண வந்த ரசிகர்களின் கதைகள் சுவாரசியமாகவும், சிலது ஆச்சரியப்படும் வகையில் இருந்துள்ளது. தேனிலவு போகாமல் மெஸ்ஸியை காண வந்த தம்பதி, கல்யாணத்தையே விட்டுவந்த வாலிபர் என பல நிகழ்வுகள் அரங்கேறி உள்ளன.

கோல்கட்டா சால்ட் லேக் மைதானத்தில் பிரபல கால்பந்து வீரரான அர்ஜெண்டினாவின் மெஸ்ஸி, ரசிகர்களை சந்தித்தார். அப்போது அவரை சரியாக காணமுடியாததால் மைதானத்தை கால்பந்து ரசிகர்கள் சூறையாடினர். போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்க, இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மெஸ்ஸியை பார்ப்பதற்காக ஏராளமானோர் தங்கள் வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகளை தூக்கி எறிந்துவிட்டு, சால்ட் லேக் மைதானத்திற்கு வந்துள்ளனர். அதிலும், சில ரசிகர்களின் செயல்கள் ஆச்சரியப்படும் வகையில் இருந்தது.

குறிப்பாக. மெஸ்ஸியை நேரில் பார்க்க விரும்பிய ரசிகர் கரண் என்பவர் தமது புது மனைவியுடன் வந்தார். இவர்கள் தங்களின் தேனிலவை ரத்து செய்து விட்டு இங்கு வந்திருக்கின்றனர். இது குறித்து கரண் கூறியதாவது;

கடந்த வெள்ளிக்கிழமை தான் எங்களுக்கு திருமணம் நடைபெற்றது. மெஸ்சியை பார்க்க வேண்டும். அதற்காக தேனிலவுக்கு போகாமல், இங்கே வந்துவிட்டோம்.

இவ்வாறு கரண் கூறினார்.

தேனிலவு என்ன... தமது திருமணத்தையை விட்டுவிட்டு வாலிபர் ஒருவர் மெஸ்ஸியை பார்க்க ஓடோடி வந்துவிட்டார். அவர் கூறியதாவது;

மெஸ்ஸி வருகிறார் என்றவுடன் நாங்கள் அனைவரும் உற்சாகமாக இருக்கிறோம். இன்று எனக்கு கல்யாணம். அதை விட்டுவிட்டு, இங்கே ஓடி வந்திருக்கிறேன். ஆனால் என் எதிர்பார்ப்பு பூர்த்தியாகவில்லை. அவரை(மெஸ்ஸியை) பார்க்க முடியவில்லை.

இவ்வாறு அந்த வாலிபர் கூறினார்.

Advertisement