16/12/2025 வெளியீடு முட்காடுகளை ராஜபாட்டையாக்கும் 'தினமலர்'

பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின்

அருமை உடைய செயல் -(குறள். 975)



அரிய செயல்களை அவற்றுக்கு உரிய முறையான வழியில் செய்து முடிக்கும் திறமையுடையவர்கள் பெருமைக்குரியவர் ஆவார்கள் என்பார் வள்ளுவப் பெருந்தகை. இந்தக் குறள் தினமலருக்குப் பொருந்தும். அதனை வழிநடத்திய முன்னாள் ஆசிரியர் திருமகனார் கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கும் பொருந்தும்.

1951ஆம் ஆண்டில் தொடக்கம் பெற்ற தினமலர், அன்றைய காலத்தில் நாளிதழுக்கான இலக்கணத்தை வகுத்ததிலும் புதுமையைப் புகுத்தியதிலும் ஒரு நாளிதழைக் கட்டமைத்ததிலும் அதன் பயணம் பெருமதிப்பிற்குரியது. திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் பண்டைய மரபையும் வரலாற்றையும் விரும்பிய பண்பான மனிதர். கல்வெட்டுகளின் மீதும் நாணயங்களின் மீதும் பற்றுக் கொண்ட பேராளர். அவரை ஒரு வரலாற்றாசிரியர் என்று சொன்னால் அது மிகையாகாது.

கொண்ட கொள்கையில் தடம் மாறாமல் பயணிக்கும் நாளிதழ் தினமலர். மக்களின் மனதை அதிர வைக்கும் செய்திகளையும் படங்களையும் தவிர்க்கும் நாளிதழ். 75 ஆண்டுகாலம் என்பது வெறும் காலமல்ல; அது வரலாறு, உழைப்பு, அர்ப்பணிப்பு.

நாளிதழாக மட்டும் தன் இருப்பை தமிழகத்தில் பதிய வைக்காமல், மாணவர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சிகளை நடத்தி, சமூகத்திலும் தடம் பதித்து வருவது சிறப்பு. முட்காடுகளை அழித்து நடந்து நடந்து பாதையாக்கி, பொதுமக்களுக்கு ஒரு இராஜபாட்டையை உருவாக்கித் தந்திருப்பது தினமலர். 75ஆம் ஆண்டைக் கொண்டாடும் தினமலர் நாளிதழுக்கு எனது வாழ்த்துகளும் பாராட்டுகளும். பயணம் தொடரட்டும், சிறக்கட்டும்.



வாழ்த்துகளுடன்....

முனைவர் இ.சா. பர்வீன் சுல்தானா

கல்வியாளர் மற்றும் பேச்சாளர்

Advertisement