'இந்தியா இன்டர்நேஷனல்' பின்னலாடை கண்காட்சி டில்லியில் ஜனவரி 23ல் துவக்கம்

திருப்பூர்: நாடு முழுதும் உள்ள ஏற்று மதியாளர் மற்றும் உற்பத்தியாளர்கள் பங்கேற்கும், 'இந்தியா இன்டர் நேஷனல்' பின்னலாடை கண்காட்சி, டில்லியில் ஜனவரி 23ல் துவங்குகிறது.

இந்திய பின்னலாடை ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில், 74வது இந்தியா இன்டர்நேஷனல் பின்னலாடை கண்காட்சி, ஜனவரி 23ம் தேதி துவங்கி, மூன்று நாட்கள், டில்லி யாஷோபூமி வர்த்தக கண்காட்சி மையத்தில் நடக்கிறது.

கண்காட்சியில், இந்தியா முழுதும் உள்ள 400க்கும் அதிகமான ஏற்றுமதியாளர், குளிர்கால ஆடை ரகங்களை காட்சிப்படுத்துகின்றனர்.

பெண்கள், ஆண்கள், குழந்தைகள் ஆடைகள், பின்னலாடைகளும், மறுசுழற்சி முறையில் தயாரிக்கப்பட்ட பசுமை ஆடைகளும் இடம்பெறுகின்றன.

மொத்தம், 70க்கும் அதிகமான நாடுகளை சேர்ந்த வர்த்தகர்கள், கண்காட்சியை பார்வையிட முன்பதிவு செய்துள்ளனர்.

தமிழகத்தை சேர்ந்த பின்னலாடை ஏற்றுமதியாளர்கள், கண்காட்சியில் பங்கேற்பதன் வாயிலாக, புதிய வர்த்தக ஆர்டர்களை கைப்பற்றலாம் என, ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலான ஏ.இ.பி.சி., அழைப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்து ஏ.இ.பி.சி., அதிகாரிகள் கூறுகையில், 'கண்காட்சியில் திருப்பூர் உட்பட, தமிழகத்தை சேர்ந்த தொழில் நகரங்களில் இருந்து ஏற்றுமதியாளர்கள் பங்கேற்கலாம். கண்காட்சியில் பங்கேற்பதை ஊக்குவிக்கும் வகையில், ஒரு முறை பயணிக்கும் விமான டிக்கெட் கட்டணம், மானியமாக வழங்கப்படும்.

'குறிப்பாக, வளம் குன்றா வளர்ச்சி நிலை உற்பத்தி சாதனைகளை, பின்னலாடை உற்பத்தியாளர்கள், கண்காட்சி வாயிலாக, பல்வேறு நாடுகளை சேர்ந்த வர்த்தகர்களிடம் கொண்டு சேர்க்கலாம்' என்றனர்.

பின்னலாடை ஏற்றுமதி மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கம், 1975ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது.

Advertisement