அரசு மருத்துவமனையில்...6,000 பிரசவம்!: ஓராண்டில் டாக்டர்கள் அபாரம்

1

கோவை:கோவை அரசு மருத்துவமனையில், ஓராண்டில், 18 லட்சம் பேர் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்றுள்ளனர். 6,000 பிரசவங்கள் நடந்துள்ளன; அதில், 55 சதவீதம் சிசேரியன் என்றும், இதன் வாயிலாக, ஏழை மக்களின் நம்பிக்கையை பெற்ற மருத்துவமனை என்ற நற்பெயர் கிடைத்துள்ளதாகவும், டீன் கீதாஞ்சலி தெரிவித்துள்ளார்.

திருச்சி சாலையில் கோவை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு, கோவை மட்டுமின்றி பல்வேறு மாவட்ட மக்கள் சிகிச்சை பெறுகின்றனர்.

நாள் ஒன்றுக்கு சராசரியாக 7000 முதல் 8000 பேர் புற நோயாளிகளாகவும், 2500 பேர் உள் நோயாளிகளாகவும் தங்கி சிகிச்சை பெறுகின்றனர்.

கேரளா போன்ற பிற மாநில மக்களும் வந்து செல்கின்றனர். 2025ம் ஆண்டில் ஜன., முதல் டிச., வரை, புறநோயாளிகளாக மட்டும், 18 லட்சம் பேரும் உள் நோயாளிகளாக 5 லட்சத்து 71 ஆயிரம் பேரும் சிகிச்சை பெற்றுள்ளனர்.

மருத்துவமனை டீன் கீதாஞ்சலி கூறுகையில், ''கோவை அரசு மருத்துவமனைக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து மக்கள் நம்பிக்கையுடன் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். ஓராண்டில் மேஜர் அறுவை சிகிச்சை 20 ஆயிரம், மைனர் அறுவைசிகிச்சைகள் 70 ஆயிரம் நடந்துள்ளன. 6000 பிரசவங்கள் நடந்துள்ளன.

அதில், 55 சதவீதம், சிசேரியன் பிரசவங்கள். தவிர, உடல் தானம் 120 பேரும், 7 உடல் உறுப்பு தானமும் பெறப்பட்டுள்ளன. இதன் வாயிலாக, ஏழை மக்களுக்கு நம்பகமான சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை என்ற நற்பெயர் கிடைத்துள்ளது,'' என்றார்.

Advertisement