பிரசவ இறப்பு விகிதம் குறைந்தது: மத்திய அரசு அறிவிப்பு

தார்: மருத்துவமனை பிரசவங்கள் அதிகரிப்பால் நாட்டின் பிரசவ இறப்பு விகிதம் கணிசமாக குறைந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா கூறினார்.

மத்தியப் பிரதேசத்தின் தார் மற்றும் பேதுல் மாவட்டங்களில் பொது-தனியார் பங்களிப்பில் புதிய மருத்துவ கல்லுாரிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
மருத்துவ கல்லுாரி அடிக்கல் நாட்டுவிழாவில் ஜே.பி.நட்டா பேசியதாவது:
மருத்துவமனை பிரசவங்கள் அதிகரிப்பால், நாட்டில் பிரசவ இறப்பு விகிதம் கணிசமாக குறைந்தது. நாட்டில் தற்போது மருத்துவமனைகளில் நடைபெறும் பிரசவங்களின் எண்ணிக்கை 89 சதவீதம் ஆக உயர்ந்துள்ளது. இது இதற்கு முன்னர் 79 சதவீதமாகத்தான் இருந்தது.

இதன்காரணமாக, இந்தியாவின் பிரசவ இறப்பு விகிதம் ஒரு லட்சம் பிறப்புகளுக்கு 97 என்ற அளவிற்கு குறைந்துள்ளது.

இது தேசிய சுகாதாரக் கொள்கையின் இலக்கான 100-க்கும் கீழாகும்.பிரசவத்திற்கு துணையாக இருக்கும் ஆஷா பணியாளர்களின் அர்ப்பணிப்பு முக்கியமானது. அவர்கள் அடிப்படையான, பாதுகாப்பான பிரசவத்தை உறுதி செய்கிறார்கள்.
கர்ப்ப காலத்தில் தாய்மார்களுக்கு குறைந்தது ஐந்து முறை பிரசவத்திற்கு முந்தைய பரிசோதனைகளை அரசு கட்டாயமாக்கியுள்ளது.


தடுப்பு சுகாதார நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக 40 கோடிக்கும் அதிகமானோருக்கு ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.இவ்வாறு ஜே.பி.நட்டா பேசினார்.

Advertisement