50 விமான சேவைகளை ரத்து செய்த இண்டிகோ; டில்லி, புனே உள்ளிட்ட விமான நிலையங்களில் பயணிகள் தவிப்பு

புதுடில்லி: நாடு முழுவதும் பல்வேறு விமான நிலையங்களில் இண்டிகோ நிறுவனத்தின் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. திடீரென விமான சேவை ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் தவிப்புக்கு ஆளாகினர்.

விமானிகளுக்கான அதிக ஓய்வு நேரம் தொடர்பான விதிகள் காரணமாக இண்டிகோ விமான நிறுவனத்தின் சேவைகள் இம்மாத தொடக்கத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டது. பார்லிமென்டிலும் இதுகுறித்து கேள்விகள் எழு, உரிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளதாக மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்தது.

இந் நிலையில், இன்று மீண்டும் முக்கிய விமான நிலையங்களில் இண்டிகோ நிறுவனத்தின் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. குறிப்பாக முக்கிய விமான நிலையங்களான டில்லி, வாரணாசி, புனே, சண்டிகர், அமிர்தசரஸ், இந்தூர், பாட்னா ஆகியவற்றில் 50 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இண்டிகோ விமான நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஆனால் என்ன காரணத்துக்காக சேவைகள் திடீரென ரத்து செய்யப்பட்டது என்பது பற்றிய எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. விமான சேவைகள் ரத்து காரணமாக, பயணிகள் தவிப்புக்கு ஆளாகினர்.

Advertisement