ஆந்திராவில் அதிகரிக்கும் 'சுன்னத்' சிகிச்சை; மத நோக்கம் இருப்பதாக ஓய்வு அதிகாரி 'பகீர்'

2

ஹைதராபாத்: ஆந்திராவில், மருத்துவ நலன் என்ற பெயரில் முஸ்லிம் அல்லாத சிறுவர்களுக்கும், மத நோக்கத்துடன், 'சுன்னத்' அறுவை சிகிச்சை செய்யப்படுவதாக, ஓய்வுபெற்ற சி.பி.ஐ., இயக்குநர் நாகேஸ்வர ராவ் குற்றஞ்சாட்டி உள்ளார். இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப் போவதாக ஆந்திர அரசு அறிவித்து உள்ளது.


ஆந்திராவில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில், தெலுங்கு தேசம், ஜன சேனா மற்றும் பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்ய குமார் யாதவுக்கு, ஓய்வுபெற்ற சி.பி.ஐ., இயக்குநர் நாகேஸ்வர ராவ் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:


ஆந்திராவில், முஸ்லிம் அல்லாத சிறுவர்களுக்கும் பிறப்பு உறுப்பு முன்தோல் நீக்கும், 'சுன்னத்' அறுவை சிகிச்சை நீண்டகாலமாக செய்யப்பட்டு வருகிறது. மருத்துவ ரீதியாக நன்மை தரும் என நம்ப வைத்து, இந்த ஆப்பரேஷன் செய்யப்படுகிறது. இதன் பின்னணியில் குறிப்பிட்ட மத அமைப்புகள் இருக்கலாம்.


இந்த மோசடி குறித்து, சில டாக்டர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் கொடுத்த நம்பகமான தகவல்கள் அடிப்படையில் இந்த புகாரை எழுப்பியுள்ளேன். முழுமையாக விசாரணை நடத்தினால், இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பது அம்பலமாகும்.


எனவே, ஆந்திராவில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லுாரிகள் மற்றும் நிறுவனங்களின் பாடத்திட்டங்கள், கற்பிக்கும் முறைகள், பயிற்சி தொகுதிகளை ஆய்வு செய்ய வேண்டும். அதில், சுன்னத் செய்வது குறித்து பயிற்சி டாக்டர்களிடம் பரப்பப்படுகிறதா, பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக அது சேர்க்கப்பட்டிருக்கிறதா என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும்.


மத நோக்கத்துடன் சுன்னத் ஆப்பரேஷனுக்கு பரிந்துரைக்கப்படுவது உறுதியானால், அதை தடுக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவ கல்வி வழிகாட்டுதலில் தேவையான திருத்தங்களை உடனடியாக கொண்டுவர வேண்டும். தேவையெனில், இது பற்றி பொதுமக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மருத்துவ ரீதியாக நடக்கும் இந்த மோசடி குறித்து தன் கவனத்திற்கு கொண்டு வந்ததற்காக, சுகாதார அமைச்சர் யாதவ் நன்றி தெரிவித்துக் கொண்டார். அத்துடன் இந்த விவகாரம் குறித்து விரிவாக விசாரணை நடத்தப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

Advertisement