ஹிந்து இளைஞர் படுகொலைக்கு வங்கதேச இடைக்கால அரசு கண்டனம்

டாக்கா: வங்கதேசத்தில் ஹிந்து மதத்தை சேர்ந்த திபு சந்திர தாஸ் கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டது கொடூரமான செயல். இதுபோன்ற செயல்களுக்கு வங்கதேசத்தில் இடமில்லை என வங்கதேச இடைக்கால அரசு தெரிவித்துள்ளது.


வங்கதேசத்தில் நடந்து வரும் வன்முறையில், ஹிந்து மதத்தை சேர்ந்த திபு சந்திர தாஸ் கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டார். இந்த இக்கட்டான நேரத்தில், இன்று திபு சந்திர தாஸின் குடும்பத்தினரை அரசின் சார்பில், கல்வி ஆலோசகர் பேராசிரியர் சி.ஆர். அப்ரார் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அவர் திபு சந்திர தாஸின் தந்தையான ரபிலால் தாஸ் உள்ளிட்டோருடன் பேசினார்.


இது குறித்து வங்கதேச இடைக்கால அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வங்கதேசத்தில் ஹிந்து மதத்தை சேர்ந்த திபு சந்திர தாஸ் கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டது கொடூரமான செயல். இதற்கு எந்த நியாயமும் இல்லை. இது போன்ற செயல்களுக்கு வங்கதேசத்தில் இடமில்லை.


குற்றச்சாட்டுகள், வதந்திகள் ஒருபோதும் வன்முறைக்கு காரணமாக சொல்ல முடியாது. எந்தவொரு தனிநபருக்கும் சட்டத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொள்ள உரிமை இல்லை.
இடைக்கால அரசு சட்டத்தின் ஆட்சியில் அசைக்க முடியாத உறுதிபூண்டுள்ளது. அதிகாரிகள் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரையும் விசாரித்து நீதியை உறுதி செய்வார்கள். இந்தக் குற்றம் தொடர்பாக 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணை நடந்து வருகிறது.


இந்த வழக்கை முழுமையாகவும் எந்த விதிவிலக்கும் இன்றிப் பின்தொடர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதுபோன்ற வன்முறைச் செயல்கள் சட்டத்தின் முழு பலத்துடன் எதிர்கொள்ளப்படும். மதம், இனம் அல்லது பின்னணி ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், அனைத்து குடிமக்களின் பாதுகாப்பு, கண்ணியம் மற்றும் சமமான பாதுகாப்பை உறுதி செய்வதில் அரசு முழுமையாக உறுதியாக உள்ளது.


திபு சந்திர தாஸின் குடும்பத்தினருக்கு நிதி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வரும் காலத்தில் அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பார்கள்.அனைத்து குடிமக்களையும் பாதுகாப்பதற்கும், நீதி நிலைநாட்டப்படுவதை உறுதி செய்வதற்கும் இடைக்கால அரசு உறுதிப்பூண்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement