மக்களை பலி வாங்கும் திமுக அராஜக அரசியலை தமிழகம் ஒருபோதும் மன்னிக்காது; அண்ணாமலை காட்டம்

6

சென்னை; ஏழை, எளிய மக்களின் உயிர்களை பலி வாங்கும் திமுக அராஜக அரசியலை, தமிழகம் ஒருபோதும் மன்னிக்காது என்று தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறி உள்ளார்.



இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவின் விவரம்;


கோவை மாவட்டம் அன்னூர் பகுதியில், திமுக கட்சி ஆர்ப்பாட்டத்திற்காக, 75 வயது பொன்னம்மாள் என்ற வயது முதிர்ந்த மூதாட்டியை அழைத்து வந்து, கொளுத்தும் வெயிலில் நிற்க வைத்து, அவரது உயிரிழப்பிற்கு காரணமான சம்பவம் மிகுந்த அதிர்ச்சியும் கோபமும் அளிக்கிறது.


திமுக ஆர்ப்பாட்டத்துக்கு வரவில்லையென்றால், நூறு நாள் வேலைத்திட்டத்திற்கான ஊதியம் தர முடியாது என்று மிரட்டி, பல்வேறு பகுதிகளில் இருந்து வயது முதியவர்களை வாகனத்தில் அழைத்து வருவது திமுகவினரின் வழக்கம். தனது அரசியல் லாபத்திற்காக அரங்கேற்றும் தேர்தல் நாடகங்களுக்கு, ஏழை எளிய மக்களின் உயிர்களை பலி வாங்கும் திமுகவின் அராஜக அரசியலை, தமிழகம் ஒருபோதும் மன்னிக்காது.


மனிதாபிமானமே இல்லாமல் முதியவர்களை சிரமப்படுத்தி, ஒரு உயிரிழப்பிற்கு காரணமான அன்னூர் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் பழனிச்சாமி உள்ளிட்டவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.


இவ்வாறு அந்த பதிவில் அண்ணாமலை கூறியுள்ளார்.

Advertisement