சாலையில் நடமாடும் குதிரைகளுக்கு...'கடிவாளம்' போடணும் வாகன ஓட்டிகளுக்கு விபத்து அச்சம்

கோவை, மாநகரில் கட்டுப்பாடின்றி சுற்றித்திரியும் மாடுகள், குதிரைகளால், வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகின்றனர். பாதசாரிகள் பதைபதைப்புடன் கடந்து செல்கின்றனர். கட்டுப்பாடின்றி நடமாடும் குதிரை உள்ளிட்ட கால்நடைகளுக்கு, மாநகராட்சி நிர்வாகம் 'கடிவாளம்' போட வேண்டும்.



உழவர் சந்தை, மார்க்கெட்கள் மிகுந்த உக்கடம், டவுன்ஹால், சாய்பாபாகாலனி பகுதிகளில் மாடுகளை, அதன் உரிமையாளர்கள் தீவனத்துக்காக அவிழ்த்து விடுகின்றனர்.

Tamil News
அவை வாகன ஓட்டிகள் மீது மோதுவதுடன், பாதசாரிகளை முட்டித்துாக்கி வீசும் சம்பவங்களும் நடக்கின்றன. இதில் குதிரைகளும் உண்டு. இவை எட்டி உதைப்பது, கடித்து வைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றன. மேட்டுப்பாளையம் ரோடு, தடாகம் ரோடு, கவுண்டம்பாளையம், ஜி.என். மில்ஸ் பிரிவு, திருச்சி ரோடு பாப்பம்பட்டி பிரிவு அருகே, நீலாம்பூர் பைபாஸ் பகுதிகளில், கைவிடப்பட்ட குதிரைகளை அதிகம் காணமுடிகிறது. சமீபத்தில், வெள்ளக்கிணறு ரோட்டில் குறுக்கே பாய்ந்த குதிரைகளால், ஸ்கூட்டரில் இரு குழந்தைகளுடன் சென்ற பெண், தடுமாறி விழுந்து விபத்துக்குள்ளானார். அப்பெண் லேசான காயமடைந்தார். குழந்தைகள் காயமின்றி தப்பினர்.

ஏழு ஆண்டுகளுக்கு முன், துடியலுார் அருகே பூம்புகார் நகரில் ரோட்டில் நடந்து சென்றவர்களை, குதிரை ஒன்று கடித்து குதறிய சம்பவத்தை, யாராலும் மறக்க முடியாது.

துரத்தப்படும் குதிரைகள் முன்பு பொது போக்குவரத்துக்கு குதிரை வண்டிகள் பயன்படுத்தப்பட்டன. தற்போது, ரேக்ளா போட்டிகளுக்காக மட்டுமே பெரும்பாலும் குதிரைகள் வாங்கப்படுகின்றன. லட்சக்கணக்கில் பணம் கொடுத்து வாங்குபவர்கள் தகுதியின்மை,நோய் பாதிப்பு, போட்டியின்போது விபத்து போன்ற காரணங்களால், அவற்றை துரத்தி விடுகின்றனர்.

வேறு வழியின்றி ரோட்டில் சுற்றித்திரிந்து, மக்களுக்கு அச்சுறுத்தலாக மாறுகின்றன. எனவே, மாடுகளை மட்டுமல்லாமல், குதிரைகளையும் பிடித்துஅதன் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; சாலைகளை பாதுகாப்பானதாக மாற்ற வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

@block_B@

'நடவடிக்கை எடுக்கப்படும்'

மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கூறுகையில், ''குதிரைகளால் ரோட்டில் தொல்லை அதிகரித்துள்ளதாக, சமீபகாலமாக புகார்கள் வருகின்றன. அவற்றை பிடித்தாலும் பராமரித்து வைக்க இடமில்லை. குதிரைகளை கட்டுப்படுத்துவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்து வருகிறேன். ரோட்டில் சுற்றித்திரியும் குதிரைகளை பிடிக்க ஏற்பாடு செய்யப்படும். அலட்சியமாக அவிழ்த்து விடுவோர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.block_B

Advertisement