பாசன நீர் திறப்பு தேதி அறிவிக்க விவசாயிகள் வேண்டுகோள் 

திருப்பூர்: கீழ் பவானி பாசனத்தில், வரும் ஜன., மாதம் நடப்புப் பாசனப் பருவத்துக்கு நீர் திறக்கப்பட வேண்டும் என, பாசன சங்கம் தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

இது குறித்து, கீழ் பவானி பாசன பயனாளிகள் நலச்சங்கம் சார்பில், தமிழக முதல்வர், பொதுப்பணித்துறை அமைச்சர், நீர் வளத்துறை செயலாளர் ஆகியோருக்கு அனுப்பிய கடிதம்:

கீழ் பவானி பாசனத்தில் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பயன் பெறுகின்றனர். இதில், மொத்த பரப்பளவு 2.07 லட்சம் ஏக்கர். ஆனால், ஒரு சமயத்தில், 1.03 லட்சம் ஏக்கர் நிலத்துக்கே, பாசன தண்ணீர் விடும் வகையில், பிரதான கால்வாய் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், ந டப்பு தண்ணீர் ஆண்டில் கீழ்பவானி பாசனத்துக்கு, 1.03 லட்சம் ஏக்கர் நிலத்தில் நெல் சாகுபடிக்கு ஆக. மாதம் தண்ணீர் திறக்கப்பட்டது. நீர் திறப்பு தாமதமாகி, நெற்பயிர் விதைப்பது தாமதமாகியது. இதனால், நீர் திறப்பு, 31ம் தேதி வரை நீட்டிக்க வேண்டும்.

இதுதவிர, ஜன. மாதம் முதல் வாரத்தில் கீழ் பவானி பாசனத்தில் இடம் பெற்றுள்ள நடப்பு தண்ணீர் ஆண்டில் பாசனம் பெறாத மீதமுள்ள 1.03 லட்சம் ஏக்கர் பரப்பிலான நிலத்தில், கடலை சாகுபடிக்கான தண்ணீர் திறக்க வேண்டும். அதற்கான தேதியை அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement