கமிஷனுக்காக மின் உற்பத்தி முடக்கம்; தி.மு.க., அரசு மீது பா.ஜ., குற்றச்சாட்டு
சென்னை: 'கடந்த, 2024ல் மட்டும், 28,772 கோடி ரூபாய்க்கு, தனியாரிடம் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்திருப்பது, கமிஷன் கல்லா கட்ட தான்' என, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
28,772 கோடி கடந்த நான்கரை ஆண்டுகளில், தமிழகத்தில் புதிதாக ஒரு மெகா வாட் கூட, மின் உற்பத்தி செய்யப்படவில்லை. ராமநாதபுரம் உப்பூர், திருவள்ளூர் எண்ணுார், நாமக்கல் கொல்லிமலை, நீலகிரி குந்தா நீர் மின் நிலையங்களில், கட்டுமானப் பணிகளே முடங்கியுள்ளன.
மேலும், கட்டுமானப் பணிகள் முடிவடைந்த, வட சென்னை, துாத்துக்குடி மாவட்டம் உடன்குடி மின் நிலையங்களில், மின் உற்பத்தி துவக்கப்படவில்லை.
கடந்த ஐந்து ஆண்டுகளில், தமிழகத்தின் மின்சார கொள்முதல் செலவு, 60 சதவீதம் உயர்ந்துள்ளது.
அதிலும், 2024ல் மட்டும், 28,772 கோடி ரூபாய்க்கு, தனியாரிடம் இருந்து மின் கொள்முதல் செய்திருப்பது, கமிஷன் கல்லா கட்ட தான், தி.மு.க., அரசு மின் உற்பத்தியை முடக்கியுள்ளது என்பது தெளிவாக தெரிகிறது.
இதே தி.மு.க., அரசு தான், தனியாரிடம் மின்சாரம் வாங்குவதை குறைத்து, 20,000 மெகா வாட் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி செய்யப்படும் என, 2021ல் தேர்தல் வாக்குறுதி அளித்தது.
கொடுத்த வாக்குறுதியை மறந்து, கஜானாவை வழித்தெடுத்து, மின் உற்பத்தியை கிடப்பில் போட்டு, கமிஷன் கல்லா கட்ட, தனியாரிடம் மின் கொள்முதல் செய்யும் இருண்ட மாடல் தி.மு.க., அரசு, விடியல் அரசு எனக்கூற வெட்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஏமாற்றினர்
நயினார் நாகேந்திரனின் வெளியிட்ட மற்றொரு அறிக்கை:
பொங்கலுக்கு ரேஷன் கார்டுதாரர்களுக்கு கரும்பு வழங்குவது போல், மஞ்சள் கிழங்கையும், தி.மு.க., அரசு வழங்க வேண்டும். மஞ்சளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்படும் என, 2021ல் தி.மு.க.,வினர் தேர்தல் அறிக்கையில் கூறி ஏமாற்றினர்.
இதற்கு பிராயசித்தமாக முதல்வர் ஸ்டாலின், விவசாயிகளிடம் இருந்து, மஞ்சளை கொள்முதல் செய்து, பொங்கல் தொகுப்பில் சேர்த்து வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.