தேசிய நெடுஞ்சாலையில் சீரமைப்பு பணி பைபாசில் கனரக வாகனங்கள் அணிவகுப்பு
விழுப்புரம்: விழுப்புரம் அருகே அரசூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் கட்டுமானம் மற்றும் சாலை புதுப்பிக்கும் பணி நடைபெறுவதால், ஜானகிபுரம் பைபாசில் கனரக வாகனங்கள் திருப்பி விடப்பட்டது.
விழுப்புரம் அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், அரசூர், இருவேல்பட்டு பகுதியில் மலட்டாற்றின் மீது மேம்பாலம் கட்டும் பணிகள் நடந்து வருகிறது.
கடந்த இரு தினங்களாக விழுப்புரத்திலிருந்து அரசூர் பகுதி வரை நான்கு வழிச்சாலை புதுப்பித்து தார் சாலை போடும் பணிகள் நடந்து வருகிறது. நேற்று ஒருபுறம் சாலை போடும் பணி நடந்ததால், இருவேல்பட்டு, அரசூர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனால், விழுப்புரம் மாவட்ட போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார், அரசூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் தொடரும் வாகன நெரிசலை தடுக்கும் விதத்தில், நேற்று மதியம் முதல் விழுப்புரம் அருகே ஜானகிபுரம் பைபாஸ் சாலை மேம்பாலம் சந்திப்பில், கனரக வாகனங்களை மட்டும் மாற்று சாலையில் திருப்பி அனுப்பும் பணியில் ஈடுபட்டனர்.
ஜானகிபுரம் மேம்பாலம் சந்திப்பில் நின்ற போலீசார், சென்னை மற்றும் விழுப்புரம் பகுதியிலிருந்து, திருச்சி நோக்கிச் சென்ற கனரக வாகனங்களை தடுத்து நிறுத்தி, அவர்களை இடதுபுறமுள்ள புதுச்சேரி-நாகை நான்கு வழிச்சாலையில் திருப்பி விட்டனர்.
கன்டெய்னர் லாரிகள், டேங்கர் லாரிகள், நெல் அறுவடை இயந்திரங்களை ஏற்றிய லாரிகள், அதிக அச்சுகள் கொண்ட கனரக லாரிகள் போன்றவற்றை திருப்பி அனுப்பினர்.
இந்த கன ரக வாகனங்கள், புதுச்சேரிக்கான பைபாஸ் வழியாக சென்று, கோலியனுார் கூட்ரோடு அருகே வாணியம்பாளையம் சந்திப்பில், கும்பகோணம் நெடுஞ்சாலையில் இடதுபுறம் திரும்பி, பண்ருட்டி - மடப்பட்டு வழியாக செல்ல திருப்பி விட்டனர்.
ஆனால், பெரும்பாலான கனரக வாகன ஓட்டிகள், நீண்ட தொலைவிற்கு சுற்றி செல்வதற்கு தயங்கியபடி, ஜானகிபுரம் பைாபாஸ் சந்திப்பு மேம்பாலத்திலேயேயும், சுற்றியுள்ள சர்வீஸ் சாலைகளிலும், நேற்று மாலை முதல் இரவு வரை நீண்ட துாரம் வாகனங்களை ஓரமாக நிறுத்தி வைத்திருந்தனர்.