'சன்சாத் கேல் மஹோத்சவ்' விளையாட்டு பரிசளிப்பு விழா காணொலியில் உரையாடும் பிரதமர்

ஊட்டி: 'சன்சாத் கேல் மஹோத்சவ்' விளையாட்டு திருவிழாவில், நீலகிரி தொகுதியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா, 25-ம் தேதி நடக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடி வழிகாட்டுதல் படி, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நட்டா முன்னெடுப்பில் நாடு முழுவதும் உள்ள லோக்சபா உறுப்பினர்கள் சார்பில், 'சன்சாத் விளையாட்டு திருவிழா--2025' நடத்தப்பட்டு வருகிறது.

இதன்படி, மத்திய இணையமைச்சர் முருகன் முயற்சியில், நீலகிரி லோக்சபா தொகுதிக்குள் இருக்கும் இளைய தலைமுறையினரின் விளையாட்டுத் திறனை அடையாளம் கண்டு அங்கீகரிக்கும் விதமாகவும், வெற்றி பெறுவோரை தேர்ந்தெடுத்து தேசிய, சர்வதேச மற்றும் ஒலிம்பிக் போன்ற போட்டிகளுக்குத் தயார் செய்கின்ற விதமாகவும், சன்சாத் விளையாட்டுத் திருவிழா,- நீலகிரி லோக்சபா தொகுதி முழுவதும் கடந்த, 2 மாதங்களாக நடந்தது. இதன்படி, கடந்த நவ., 21ம் தேதி மேட்டுப்பாளையத்தில் இறகுப்பந்து போட்டிகளுடன் தொடங்கிய இந்த விளையாட்டுத் திருவிழாவில், நவ., 28ம் தேதி, ஊட்டியில் கால்பந்து போட்டி களுடன் நடந்து முடிந்தது.

மேலும், அடுத்த கட்டமாக டிச., 5ம் தேதி, காரமடையில் கபடி, வாலிபால், கோ-கோ, சிலம்பம் மற்றும் யோகா போன்ற பல்வேறு போட்டிகள் நடந்தது.

இறுதி கட்டமாக, டர்ப் கிரிக்கெட் போட்டிகள் கடந்த வாரம், 12ம் தொடங்கி 3 நாட்கள் நடந்து முடிந்தது.

இந்த போட்டிகளில் கலந்து கொண்டு, சிறப்பான விளையாட்டுத் திறனை வெளிப்படுத்திய வீரர் மற்றும் வீராங்கனைகள், கேலோ இந்தியா அமைப்பின் வாயிலாக தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பயிற்சி மேற்கொள்கின்ற வகையில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

விளையாட்டு திருவிழாவின் நிறைவு விழா மற்றும் பரிசளிப்பு விழா, மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை ஆலாங்கொம்பு பகுதியில் அமைந்துள்ள எஸ்.எஸ்.வி.எம்., பள்ளியில், வரும், 25ம் தேதி நடக்கிறது. சிறப்பான திறமையை வெளிப்படுத்திய விளையாட்டு வீரர்கள் ஒரு சிலருடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக கலந்துரையாடுகிறார்.

மேலும், மத்திய இணையமைச்சர் முருகன், முன்னாள் தடகள வீராங்கனையும் மாநிலங்களவை உறுப்பினருமான உஷா, தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் பிரகாஷ் குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு பரிசளிக்க உள்ளனர்.

Advertisement