நெகிழி கழிவுகளை அகற்றிய மாணவர்கள்

அவிநாசி: திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி என்.எஸ்.எஸ். அலகு -- 2 சார்பில், ஏழு நாள் சிறப்பு முகாம், அவிநாசி அருகே கருமாபாளையத்தில் நடந்து வருகிறது.

முகாமின் இரண்டாம் நாளான நேற்று, திருப்பூர் வடக்கு மாசுகட்டுபாடு வாரியம் சார்பில்,'பிளாஸ்டிக் இல்லா தமிழ்நாடு' விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. அலகு - 2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக உதவி பொறியாளர் மன்னர் திப்புசுல்தான் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

அவர் பேசுகையில், 'ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஒருமுறை பயன்படுத்தி துாக்கி எறியும் பிளாஸ்டிக் சுற்றுச்சூழலை சீரழிந்து பறவைகள், விலங்குகள் பாதிக்கப்படுகிறது. நெகிழியை எரிப்பதால் காற்று மாசடைந்து பல பிரச்னைகள் ஏற்படுகிறது. நெகிழிப்பைகளின் பயன்பாட்டை தவிர்த்து, துணிப்பைகளை பயன்படுத்த வேண்டும்,' என்றனர்.

மாணவ செயலர்கள் கிருஷ்ணமூர்த்தி, செர்லின், நவீன்குமார், ரேவதி ஆகியோர் தலைமையில் மாணவ, மாணவியர் ரங்கோலி கோலமிட்டு பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 'நெகிழி தவிர்த்து, நெஞ்சம் நிமிர்த்துவோம்' போன்ற கோஷங்களை எழுப்பி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. கிராமத்தில் உள்ள நெகிழி கழிவுகள் அகற்றப்பட்டது. கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன், நிகழ்விற்கான ஏற்பாட்டை செய்தார்.

Advertisement