' வெள்ளி விலை சரியாது வாங்கும் பழக்கத்தை தொடரணும்'

கோவை: தொழிற்துறை பயன்பாட்டுக்கான உலோகம் என்பதால், வெள்ளி விலை பெரிய அளவில் சரிய வாய்ப்பில்லை. தொடர்ந்து உயரவே வாய்ப்பு அதிகம் என, தங்கம், வெள்ளி உலோக கட்டிகள் விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தென்னிந்திய புல்லியன் அசோசியேசன் தலைவர் கார்த்திக் கூறியதாவது:

இரண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரை, வெள்ளி, ஒரே விலையில் நீடிக்கும் இயல்பு கொண்டது. தொழிற்துறை தேவை அதிகரிக்கும்போது அதன் விலை உயரும்.

தற்போது, வெள்ளி மட்டுமல்லாது, செம்பு, துத்தநாகம், ஈயம் போன்றவற்றுக்கும் தொழில்துறை பயன்பாடு அதிகரித்திருக்கிறது. குறிப்பாக மின் வாகனங்கள், சிப்கள், ஏ.ஐ.,க்கான உதிரிபாகங்களில் வெள்ளியின் பயன்பாடு அதி கம்.

சீனா ஏற்றுமதியை நிறுத்தி, வெள்ளியை சேகரிக்கிறது. சோலார், மின் வாகனங்கள் என அடுத்த இரு ஆண்டுகளுக்கு உற்பத்தித் திட்டமிடல் சீனாவுக்கு இருக்கும். மூலப்பொருள் விலையைக் கட்டுக்குள் வைத்து, உள்நாட்டு உற்பத்தியில் கவனம் செலுத்த வெள்ளி ஏற்றுமதியை நிறுத்திவிட்டது.

மற்ற நாடுகளும், தொழில்துறை தேவையைக் கருத்தில் கொண்டு வெள்ளியை இருப்பு வைத்து வருவதால் தான், இவ்வளவு விலை உயர்ந்திருக்கிறது. இனி வரும் காலங்களில், இதே வேகத்தில் வெள்ளியின் விலை உயராது. கொஞ்சம் கொஞ்சமாக உயரலாம். விலை குறைவது பெரிய அளவில் இருக்காது என கணிக்கிறோம்.

வெள்ளி விலை உயர்ந்துவிட்டதற்காக மக்கள் வாங்காமல் இருக்கக்கூடாது. முன்பு அரை கிலோ 30,000 ரூபாய் எனில், தற்போது அந்த விலைக்கு 100 கிராம் தான் வாங்க முடியும் என்றால், வாங்கி வைத்துக் கொள்ளலாம்.

விலை இறக்கம் இருந்தாலும், பெரிய சரிவு இருக்காது. தொழிற்துறை தேவைக்கான உலோகம் என்பதால் வெள்ளியின் விலை எதிர்காலத்தில் தொடர்ந்து உயரவே செய்யும். வெள்ளி வாங்கும் பழக்கத்தை மக்கள் தொடர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement