இறந்த வாக்காளர் பெயர்கள் பட்டியலில் வந்தது எப்படி? கண்டறிந்து நீக்க வலியுறுத்தல்
திருப்பூர் மாவட்ட வரைவு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள இறந்த, இரட்டை பதிவு வாக்காளர்களை கண்டறிந்து நீக்க வேண்டும்; வரும் பிப்ரவரியில், செம்மையான இறுதி பட்டியல் வெளியாகவேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எட்டு தொகுதிகளில், தீவிர திருத்தப்பணிக்கு பின் (எஸ்.ஐ.ஆர்.) இறந்தவர்கள் 1 லட்சத்து 58 ஆயிரத்து 457 பேர்; இடம்பெயர்ந்தோர், 3 லட்சத்து 82 ஆயிரத்து 927 பேர்; இரட்டை பதிவு 22 ஆயிரத்து 401 என, 5 லட்சத்து 63 ஆயிரத்து 785 பேர், பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, 24 லட்சத்து 44 ஆயிரத்து 929 ஆக இருந்த மொத்த வாக்காளர் எண்ணிக்கை, 18 லட்சத்து 81 ஆயிரத்து 144 ஆக குறைந்துள்ளது. இறந்த வாக்காளர் பலரது பெயர்கள் நீக்கப்படாமலும், இரட்டை பதிவு வாக்காளர் இரண்டு தொகுதிகளின் வரைவு பட்டியலிலும் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் அரசியல் கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
பா.ஜ., இதர பிற்படுத்தப்பட்டோர் அணி மாநில செயற்குழு உறுப்பினர் அய்யப்பன் கூறியதாவது:
திருப்பூர் தெற்கு தொகுதி, சந்திராபுரத்தை சேர்ந்த, 80 வயதான ராமலிங்கம்; இவர் இறந்து இரண்டரை ஆண்டுகள் ஆகிறது; மனைவியும் இறந்துவிட்டார். அவர்களது குடும்பத்தினர் யாரும் திருப்பூரில் இல்லை.ராமலிங்கத்தின் பெயர் வரைவு பட்டியலில் இடம்பெற்றிருக்கிறது.
அவரது குடும்பத்தினரோ அல்லது கட்சியினரோ படிவம் பூர்த்தி செய்து கொடுக்காத நிலையில், பட்டியலில் எப்படி பெயர் சேர்க்கப்பட்டது; அவருக்கான படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்தது யார் என்ற கேள்வி எழுகிறது.
எஸ்.ஐ.ஆர். பணியின்போது, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (பி.எல்.ஓ.) பலர், வாக்காளர்களுக்கு படிவம் வழங்கும் முன்னரே, படிவத்தை பதிவு செய்துவிட்டனர். தவறுதலாக இறந்தவர்களின் படிவங்களையும் கணக்கில் சேர்த்துள்ளனர்.
சந்திராபுரத்தை போன்று, மற்ற பகுதிகளிலும், இறந்தவர்கள் பலரது பெயர் வரைவு பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது.எனவே மீண்டும் கள ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு, தெரிவித்தார்.
மேல்முறையீடு வரவில்லையே! தேர்தல் பிரிவினர் கூறுகையில், வரைவு பட்டியலில் இறந்த வாக்காளர்கள் சேர்க்கப்பட்டிருப்பதாக, அரசியல் கட்சியினர் சிலர் பொத்தாம் பொதுவாக கூறுகின்றனர்.
இறந்தவர்கள், இரட்டை பதிவு உள்ளோர் பட்டியலில் இடம்பெற்றிருப்பின், பெயர், பாகம் விபரங்களோடு, வாக்காளர் பதிவு அலுவலரிடம் தெரிவிக்கலாம். வரைவு பட்டியல் வெளியிட்டு ஒன்பது நாட்களாகிறது; இதுவரை, கட்சியினர் யாரும், எந்த மேல்முறையீடும் செய்யவில்லை.
சமீபத்தில் தேர்தல் பார்வையாளர் வந்தபோதுகூட, அதற்கான படிவங்கள் கட்சியினருக்கு வழங்கப்பட்டது; குளறுபடிகள் இருப்பின், அப்போதே பூர்த்தி செய்து கொடுத்திருக்கலாம்; அப்போதும், எந்த கட்சியினரும், குளறுபடிகள் தொடர்பாக எந்த விவரமும் அளிக்கவில்லை.
இறந்த, இரட்டை பதிவு வாக்காளர் சேர்க்கப்பட்டிருப்பின், ஆவணங்கள் சரி பார்ப்பில், கண்டறிந்து நீக்கப்படுவர்;நிச்சயம், செம்மையான இறுதி பட்டியல் வெளியாகும், என்றனர்.
-- நமது நிருபர் -:
மேலும்
-
புடின் இல்லத்தை ட்ரோன்கள் மூலம் உக்ரைன் தாக்கியதற்கு இதோ ஆதாரம்; வீடியோவை வெளியிட்டது ரஷ்யா
-
பிரளய் ஏவுகணை சோதனை வெற்றி
-
ராமர் கோவில் இயக்கம் உலகின் மிக பிரம்மாண்ட வரலாற்று நிகழ்வுகளில் ஒன்று; அமைச்சர் ராஜ்நாத் சிங் நெகிழ்ச்சி
-
புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தயாராகும் தலைநகரம்; சென்னையின் அனைத்து மேம்பாலங்களும் மூடல்
-
உபி உடன் தமிழகத்தை ஒப்பிடக்கூடாது: பிரவீன் சக்கரவர்த்திக்கு சிதம்பரம் எதிர்ப்பு
-
ராஜஸ்தானில் பயங்கர சதி முறியடிப்பு; காரில் பதுக்கிய வெடிபொருட்கள் பறிமுதல்