ராமர் கோவில் இயக்கம் உலகின் மிக பிரம்மாண்ட வரலாற்று நிகழ்வுகளில் ஒன்று; அமைச்சர் ராஜ்நாத் சிங் நெகிழ்ச்சி

1

அயோத்தி: ராமர் கோவில் இயக்கம் உலகின் மிக பிரம்மாண்ட வரலாற்று நிகழ்வுகளில் ஒன்று என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நெகிழ்ச்சியுடன் கூறினார்.



அயோத்தியில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த ராமர் கோவில் பிரதிஷ்ட துவாதசி கொண்டாட்டத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது;


உலகின் எந்தப் பகுதியிலும், எந்த ஒரு சமூகமும் தங்கள் தெய்வத்தின் பிறப்பிடத்தில் ஒரு கோவில் கட்டுவதற்காக 500 ஆண்டுகளாக தொடர்ச்சியாக காத்திருந்தது இல்லை. பல நூற்றாண்டுகள் காத்திருப்புக்குப் பிறகு ராமர், அவரது தெய்வீக கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டார். அவரது அற்புதமான, பிரகாசமான உருவத்துடன் இன்று அயோத்திக்கு மட்டுமல்ல, முழு உலகிற்கும் மகிமையை வழங்குகிறார்.


இன்று அயோத்தியின் ஒவ்வொரு தெருவும், ஒவ்வொரு சதுக்கமும், ஒவ்வொரு வாசல் படியும், ஒவ்வொரு மூச்சும் ராமரால் நிறைந்திருக்கிறது, ஆனந்தத்தால் நிரம்பியிருக்கிறது. இந்த ஆனந்தம் அயோத்தியோடு மட்டும் நின்றுவிடவில்லை. முழு பிராந்தியமும், முழு பாரத தேசமும் இன்று ராமனையறிந்த உலகின் ஒவ்வொரு இதயமும் ராமனைப் போற்றுகிறது.


இன்றைய நாள் நம் அனைவருக்கும் மிகுந்த பெருமைக்குரிய தருணம். அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தில், பகவான் ஸ்ரீ ராமச்சந்திரரே தனது பக்தர்களுக்கு தரிசனம் அளிப்பதற்காக அயோத்தி மண்ணில் மீண்டும் தோன்றுவதற்கான நேரத்தைத் தீர்மானித்தார். அந்த மாபெரும் காவியத்தின் வெற்றியையும் நாம் கொண்டாடுகிறோம். அந்தக் காவியம் எந்த அளவுக்கு வெற்றி பெற்றது என்றால், ராமர் தனது கோவிலுக்கு வந்தது மட்டுமல்லாமல், இன்று அந்தக் கோவிலின் மீது தர்மத்தின் கொடியும் பறக்கிறது.


நான் அடிக்கடி ராமர் கோயில் இயக்கம் பற்றிச் சிந்திக்கிறேன். அந்த இயக்கம் பற்றி என்னவெல்லாம் பேசப்பட்டது, என்னவெல்லாம் பிரசாரம் செய்யப்பட்டது என்பது எனக்குத் தெரியாது. ஆனால், இந்த இயக்கம் உலகின் மிக பிரம்மாண்டமான வரலாற்று நிகழ்வுகளில் ஒன்று என்று நான் உணர்கிறேன்.


90களில் இந்த இயக்கம் எந்தத் தீவிரத்துடனும், எந்த உணர்வுடனும் உருவானது என்பதை நினைவுகூர்கிறேன். அது முழு தேசத்தையும் உலுக்கியது. ராமர் கோவில் கட்டுவதற்காகத் தொடங்கப்பட்ட அந்த இயக்கத்தை நாம் அனைவரும் நம் கண்களாலேயே கண்டு, அதில் வாழ்ந்திருக்கிறோம்.


இரட்டை எஞ்சின் அரசாங்கத்தின் வலுவான தலைமையின் கீழ், அயோத்தி முன் எப்போதும் இல்லாத மாற்றத்தைக் கண்டு வருகிறது. பிரதமரின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, நம்பிக்கை, கலாசாரம் மற்றும் வரலாறு ஆகியவற்றைப் பாதுகாத்துக்கொண்டே, இங்கு உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு உருவாக்கப்பட்டு வருகிறது.


ராமர் கோயில் கட்டப்பட்ட பிறகு, கோடிக்கணக்கான பக்தர்கள் வருகையால் அயோத்தி ஒரு உலகளாவிய மதச் சுற்றுலா மையமாக மாறியுள்ளது. சாலைகள், வீடுகள், விமான நிலையங்கள் மற்றும் ரயில்வே ஆகியவற்றின் வளர்ச்சியுடன், அயோத்தி ஒரு நவீன, பாதுகாப்பான மற்றும் வளமான முன்மாதிரி நகரமாக உருவெடுத்து வருகிறது.


இவ்வாறு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார்.

Advertisement