காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை காரை முற்றுகையிட்ட தொகுதி மக்கள்!

20


சென்னை: காஞ்சிபுரம், கோட்டூர் பகுதிக்கு சென்ற காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை காரை வழிமறித்து, அவரது தொகுதி மக்கள் முற்றுகையிட்டனர். சாலை, குடிநீர், பாதாள சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என மக்கள் ஆவேச கேள்விகளை எழுப்பினர்.


காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கோட்டூர் கிராமத்திற்கு, அந்த தொகுதி எம்எல்ஏயும், தமிழக காங்கிரஸ் தலைவருமான செல்வப் பெருந்தகை நேற்று இரவு சென்றிருந்தார். அவர் வந்திருப்பதை அறிந்து அங்கு திரண்ட ஊர் மக்கள், அவரது காரை வழிமறித்து முற்றுகையிட்டனர். உடனே அந்த பகுதியில் இருந்து காரில் விரைந்து செல்ல செல்வப்பெருந்தகை முயற்சி செய்தார்.

கூடியிருந்த மக்கள் காரை சூழ்ந்து கொண்டு, 'எம்எல்ஏ ஆகி இத்தனை நாட்கள் வராமல் தேர்தல் நெருங்கும் வேளையில் வந்தது ஏன்' என சரமாரியாக கேள்வி எழுப்பினர். சாலை, குடிநீர், பாதாள சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர். மக்கள் சூழந்து கொண்டு கேள்விகளால் துளைத்ததால் தர்மசங்கடத்திற்கு ஆளான செல்வப்பெருந்தகை காரில் திரும்பி சென்றுவிட்டார்.


எம்எல்ஏவிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. தேர்தல் நெருங்கும் சூழலில் மக்கள் அதிருப்தியில் இருப்பது அரசியல் வட்டாரங்களில் பேசும் பொருளாகி உள்ளது.

Advertisement