அண்டார்டிகாவை வென்ற தமிழகத்து சிறுமி
2025-ஆம் ஆண்டின் இறுதியில், ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் ஒரு 17 வயதுச் சிறுமி.
இந்தியக் கடற்படை அதிகாரி ஒருவரின் மகளான காம்யா கார்த்திகேயன், டிசம்பர் 30, 2025 அன்று அண்டார்டிகா கண்டத்தின் மையப்புள்ளியான தென்துருவத்தை பனிச்சறுக்கு மூலம் சென்றடைந்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
காம்யாவின் பூர்வீகம் தமிழ்நாட்டின் வீரமண்ணான மதுரை ஆகும். இவரது தந்தை கமாண்டர் எஸ். கார்த்திகேயன், இந்தியக் கடற்படையில் அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். தாயார் லாவண்யா கார்த்திகேயன், ஒரு ஆசிரியை. தற்போது இவர்கள் பணி நிமித்தமாக மும்பையில் வசித்து வருகின்றனர். காம்யா அங்குள்ள 'நேவி சில்ட்ரன் ஸ்கூலில்' 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
காம்யாவுக்கு மலையேற்றத்தின் மீது ஆர்வம் வந்ததற்கு அவரது தந்தையே காரணம். சிறந்த மலையேற்ற வீரரான தந்தை, காம்யாவுக்கு 3 வயதாக இருக்கும்போதே மகளை முதுகில் சுமந்து கொண்டு லோனாவாலாவின் சிறிய மலைகளுக்கு அழைத்துச் செல்வார். 7 வயதில் இமயமலையின் அடிவாரத்தில் பயணத்தைத் தொடங்கிய காம்யா, 9 வயதிற்குள் பல சிறிய சிகரங்களை எட்டிவிட்டார்.
காம்யா தனது லட்சியப் பயணத்திற்கு "மிஷன் சாஹஸ்" என்று பெயரிட்டுள்ளார். உலகில் உள்ள 7 கண்டங்களிலும் உள்ள மிக உயர்ந்த சிகரங்களை ஏறுவது இவரது இலக்கு.
ஆப்பிரிக்காவின் கிளிமஞ்சாரோ, ஐரோப்பாவின் எல்பிரஸ், ஆஸ்திரேலியாவின் கோசியஸ்கோ, தென் அமெரிக்காவின் அகோன்காகுவா மற்றும் அண்டார்டிகாவின் வின்சன் மாசிஃப் ஆகிய சிகரங்களை ஏறியவர்,2024-ல் தனது தந்தையுடன் இணைந்து உலகின் உச்சாணிக் கிளையான எவரெஸ்ட் சிகரத்தை ஏறி, அதைச் செய்த மிக இளம் வயது இந்தியப் பெண் என்ற சாதனையைப் படைத்தார்.
அண்டார்டிகாவின் கடும் குளிரில் (மைனஸ் 50 டிகிரி) பனிச்சறுக்கு செய்து தென்துருவத்தை அடைந்த மிக இளம் வயது இந்தியர் என்ற பெருமையை எட்டியுள்ளார்.
காம்யாவின் அசாத்திய துணிச்சலைப் பாராட்டி, இந்திய அரசு அவருக்கு 2021-ல் சிறுவர்களுக்கான உயரிய விருதான 'பிரதான் மந்திரி ராஷ்டிரிய பால் புரஸ்கார்' வழங்கி கௌரவித்தது. பிரதமர் நரேந்திர மோடி தனது 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் காம்யாவைப் பற்றிப் பெருமிதத்துடன் பேசியுள்ளார்.
காம்யா ஒரு சிறந்த பரதநாட்டியக் கலைஞர் மற்றும் இசைப்பிரியரும் கூட. இருப்பினும், அவரது எதிர்கால லட்சியம் தனது தந்தையைப் போலவே இந்திய ஆயுதப்படையில் சேர்ந்து நாட்டிற்குச் சேவை செய்வதுதான். தற்போது மீதமுள்ள ஒரே ஒரு சிகரமான வட அமெரிக்காவின் 'மவுண்ட் டெனாலி' சிகரத்தையும் ஏறிவிட்டால், உலகிலேயே மிக இளம் வயதில் 'எக்ஸ்ப்ளோரர்ஸ் கிராண்ட் ஸ்லாம்' (7 சிகரங்கள் + 2 துருவங்கள்) முடித்த வீரர் என்ற சாதனையைப் படைப்பார்.
17 வயதில், பள்ளிப் படிப்பையும் கவனித்துக்கொண்டு, உலக வரைபடத்தின் மிகக் கடினமான இடங்களை எல்லாம் தனது காலடியால் அளந்து வரும் காம்யா கார்த்திகேயன், இந்தியப் பெண்களுக்கு மட்டுமல்லாது ஒட்டுமொத்த இளைஞர்களுக்கும் ஒரு மிகப்பெரிய முன்னுதாரணம். மதுரை மண்ணின் வீரம் இப்போது அண்டார்டிகாவின் பனிக்காற்றிலும் எதிரொலிக்கிறது!
-எல்.முருகராஜ்