பிரதமர் மோடியுடன் உரையாட டில்லி செல்லும் தமிழக இளைஞர்கள்!

மதுரை: மத்திய அரசின் இளைஞர் நலன், விளையாட்டு அமைச்சகத்தின் 'மை பாரத்' நடத்திய போட்டிகளில் வெற்றி பெற்ற, தமிழக இளைஞர்கள் 80 பேர் தேசிய இளைஞர் தினத்தில் 'வளர்ச்சியடைந்த பாரதம்' என்ற தலைப்பில் பிரதமர் மோடியுடன் டில்லியில் உரையாடவுள்ளனர்.



மத்திய இளைஞர் நலத்துறை 'மை பாரத்' மாநில இயக்குநர் செந்தில்குமார் கூறியதாவது:


சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான ஜன., 12ல் ஒவ்வொரு ஆண்டும் தேசிய இளைஞர் தினம் கொண்டாடி வருகிறோம். மை பாரத், நாட்டு நலப் பணித் திட்டம் ஆகிய அமைப்புகளின் சார்பில், அரசியல் பின்புலமற்ற ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களை தேர்வு செய்து, 'வளர்ச்சி அடைந்த பாரதம் இளம் தலைவர்கள் உரையாடல்' எனும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.


தமிழகத்தில், இதன் முதல் சுற்று போட்டியான வினாடி வினா போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிபெற்ற, 2 லட்சத்து 93 ஆயிரத்து இருநுாறு பேரில், 5,050 பேர் இரண்டாம் சுற்று போட்டியான கட்டுரை போட்டி சுற்றுக்கு தகுதி பெற்றனர். இதில், 340 பேர் மூன்றாம் சுற்று போட்டியான விளக்க காட்சி சுற்றுக்கு தகுதி பெற்று, இவர்களுக்கான போட்டிகள் சென்னை டி.ஜி.வைஷ்ணவா கல்லுாரியில் நடந்தது. அதில், 45 பேர் டிராக் சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்துகொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


மதுரை காமராஜ் பல்கலை மாணவர்கள், 13 பேர் அடங்கிய கிராமிய நடன குழுவும், சென்னை பல்கலையில், 13 பேர் கொண்ட கிராமிய பாடல் குழுவும், ஒவ்வொரு போட்டியிலும் தலா ஒருவர் வீதம், 3 பேரும், தேசிய அளவிலான போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


இவர்களுடன் குழுத்தலைவர்களையும் சேர்த்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சார்ந்த, 80 பேர் ஜன., 12ல் டெல்லியில் நடைபெற உள்ள விழாவில் பங்கேற்க உள்ளனர். இவர்கள், 2026 ஜன., 12ல் டில்லியிலுள்ள பாரத் மண்டபத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, 'வளர்ச்சியடைந்த பாரதம்' எனும் தலைப்பில் தங்களது கருத்துக்களை முன்வைத்து உரையாடும் வாய்ப்புபெறுகிறார்கள்.


இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement