ஊட்டி உருளைக்கிழங்கு விலை உயர்வு

மேட்டுப்பாளையம்: -: மேட்டுப்பாளையம் உருளைக்கிழங்கு மண்டிகளில், இந்தூர் கிழங்கு விலை வீழ்ந்துள்ளது. ஊட்டி உருளைக்கிழங்கு விலை உயர்கிறது.

காந்தி மைதானத்தில், 70க்கும் மேற்பட்ட உருளைக்கிழங்கு மண்டிகள் உள்ளன. இங்கு நீலகிரி மாவட்டம் மற்றும் வடமாநிலங்களில் இருந்து உருளைக்கிழங்கு வருகிறது. இதில் 50 சதவீதம், கேரளாவுக்கு செல்கிறது. இந்தூர் கிழங்கு வரத்து அதிகரிப்பால் விலை சரிந்துள்ளதாக, உருளைக்கிழங்கு வர்த்தக சபை செயலாளர் பாபு தெரிவித்தார்.

இந்தூர் கிழங்கு வரத்து அதிகரிப்பால், புக்கராஜ் மற்றும் சூப்பர் 6 ரகங்கள் விலை சரிந்துள்ளது. 45 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை இந்தூர் புக்கராஜ் கிழங்கு ரூ. 700 முதல் ரூ.800 வரை விற்றது இப்போது, ரூ.500 முதல் ரூ.600 வரை விற்கிறது.

சூப்பர் 6 கிழங்கு ரூ.600 முதல் ரூ.700 வரை விற்கிறது. கோலார் கிழங்குகள் ரூ.1,200 முதல் ரூ.1,300 வரை போகிறது. கேரளாவில் இந்தூர் கிழங்குக்கு மவுசு என்பதால், அங்கே அதிகம் செல்கிறது.

ஊட்டி உருளைக்கிழங்கு விலை உயர துவங்கி உள்ளது. நேற்று ரூ.1,100 முதல் ரூ.1,600 வரை விற்றது. மாலத்தீவில், ஊட்டி உருளைக்கிழங்குக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது, என்றார்.

Advertisement