வெட்கமே இல்லாமல் பொய் சொல்கிறார் அமைச்சர் சுப்பிரமணியன்: ஜெயகுமார்

சென்னை: ''தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் புழக்கம் இல்லவே இல்லை என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன், கொஞ்சம்கூட வெட்கம் இன்றி பொய் சொல்கிறார்,'' என, முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் குற்றஞ்சாட்டினார்.

அவர் அளித்த பேட்டி:

தமிழகத்தை சீரழித்த, அராஜக தி.மு.க., ஆட்சியை ஒழித்து, வரும் சட்டசபை தேர்தலில், மீண்டும் அ.தி.மு.க., ஆட்சி அமைக்கும். தற்போது, தமிழகத்தில் அடக்குமுறை ஆட்சி நடக்கிறது.

ஒடுக்கப்பட்டோர், ஆதிதிராவிடர், ஆசிரியர்கள் உட்பட, அனைவரும் அல்லல்பட்டு, தமிழகமே போர்க் களமாக மாறியுள்ளது. செவிலியர்கள் 10 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தினர்.

ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் என அனைவரும் சாலைக்கு வந்து போராடுகின்றனர். மீனவர்கள் தினமும் செத்து பிழைக்கின்றனர்.

இதுபற்றி சிறிதும் கவலைப்படாமல், முதல்வர் ஸ்டாலின், வெறும் 'போட்டோ ஷூட்' நடத்த, மாவட்டம் மாவட்டமாக செல்கிறார்.

கள்ளக்குறிச்சி விஷ சாராயம் குடித்ததால், 60க்கும் அதிகமானோர் உயிரிழந்தபோது, நேரில் செல்லாத முதல்வர், தற்போது தேர்தலை மனதில் வைத்து, அங்கு செல்கிறார். அதேபோல்தான் பிற மாவட்டங்களுக்கும் செல்கிறார்.

திருத்தணியில் வடமாநில இளைஞர் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம், தமிழர்களிடையே உலக அளவில் கடும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழர்களை வட மாநிலத்தவர் தாக்கக்கூடுமோ என்ற அச்சம் தான் காரணம். முழு பாறாங்கல்லையே, சோற்றில் மறைக்கும் வித்தையை, தி.மு.க., நன்றாக கற்றுள்ளது.

தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் புழக்கம் இல்லை என, அமைச்சர் சுப்பிரமணியன், கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் பேசுகிறார். இது ஜமக்காளத்தில் வடிகட்டிய பொய்.

தேர்தலையொட்டி தி.மு.க.,வினர் விதவிதமாக வாக்குறுதி அளிப்பர். ஆனால், தமிழகத்தில் தற்போது, சட்டம் -- ஒழுங்கு சீர்குலைந்து, டாஸ்மாக் வருமானம் பெருகி, கோபாலபுரம் வருமானமும் பெருகி உள்ளது.

ஆசிரியர்கள் உட்பட அனைவருக்கும், தி.மு.க., அளித்த தேர்தல் வாக்குறுதி, காற்றில் பறக்க விடப்பட்டு உள்ளது. இந்த சர்வாதிகாரப் போக்கிற்கு, வரும் தேர்தல் முடிவு கட்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement