ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி பாதுகாப்பு பணியில் 1,000 போலீசார்

கிருஷ்ணகிரி: ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, மாவட்டத்தில் பாதுகாப்பு மற்றும் ரோந்து பணிகளில், 1,000 போலீசார் ஈடுபட்டனர். மேலும், ஓசூரில் மாவட்ட எஸ்.பி., தங்கதுரை தலைமையில், போலீசாரும், பொதுமக்களும் இணைந்து, கேக் வெட்டி கொண்டாடினர்.

இது குறித்து, மாவட்ட எஸ்.பி., அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை: 2026 ஆங்கில புத்தாண்டை, விபத்து அசம்பாவிதங்களின்றி கொண்டாட மாவட்ட போலீசாரால் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டன. அதன்படி மாவட்ட போலீசார், ஆயுதப்படை, சிற ப்பு கமாண்டோ படை மற்றும் ஊர்காவல் படை போலீசார் உள்பட, 1,000 போலீசார் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.

அதன்படி மாவட்டத்தையொட்டி உள்ள எல்லைப்புற சோதனைச்சாவடிகள், பஸ் ஸ்டாண்ட், வணிகவளாக பகுதிகள், மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் போலீசார் கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகளில் ஈடுபட்டனர். இதனால் மாவட்டத்தில் அசம்பாவிதங்களின்றி, ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட்டது. இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓசூர், காந்தி சாலை அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி., தங்கதுரை தலைமையில் பொதுமக்களுடன் இணைந்து, கேக் வெட்டி, ஆங்கில புத்தாண்டு கொண்டாடினர். ஏ.டி.எஸ்.பி., சங்கர் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.

Advertisement