சிலரது சுயநலத்தால் அழிவின் பாதையில் காங்கிரஸ் செல்கிறது; யாரைச்சொல்கிறார் கரூர் ஜோதிமணி?

37


சென்னை: ''ஒரு சிலரின் சுயநலத்திற்காக தமிழக காங்கிரஸ் கொஞ்சம் கொஞ்சமாக அழிவின் பாதையில் சென்று கொண்டிருக்கிறது,'' என கரூர் தொகுதி எம்.பி., ஜோதிமணி தெரிவித்துள்ளார்.



அவரது அறிக்கை: எந்த ஒரு அரசியல் கட்சியும், தனது கட்சி பார்லிமென்ட் உறுப்பினரை, தேர்தல் நேரத்தில், தேர்தல் கமிஷனருக்கு வாக்குச் சாவடி முகவர் பட்டியலை கொடுக்க விடாமல் முடக்க வேண்டும் என்று நினைக்காது.

ஆனால் காங்கிரஸ் கட்சியில் அது நடக்கிறது. தமிழக காங்கிரசில் நடைபெறும் விஷயங்கள் மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளது. கொள்கை நிலைப்பாடுகளை, அரசியல் செயல்பாடுகளை நீர்த்துப் போகச் செய்ய நடக்கும் முயற்சிகள் மிகுந்த வேதனை அளிக்கிறது. தினமும் தமிழக காங்கிரஸ், மக்கள் பிரச்னைகள் அல்லாத தவறான காரணங்களுக்காகவே செய்திகளில் அடிபடுகிறது.

தமிழகம் எந்தக் காலத்திலும் இல்லாத, ஒரு பேராபத்தை, மதவாத, பிரிவினைவாத, வன்முறை சக்திகளிடமிருந்து எதிர்நோக்கி உள்ளது. எதையாவது செய்து, மக்கள் உணர்வுகளைத் தூண்டி ,ஆட்சி அதிகாரத்தைப் பிடித்து, காமராசர், ஈவெரா உள்ளிட்ட மாபெரும் தலைவர்களால் கட்டிக் காக்கப்பட்ட இம்மண்ணின் சமூக நீதி, சுயமரியாதை, மக்கள் நல அரசியல், வளர்ச்சியை குழிதோண்டிப் புதைக்க ஒரு கூட்டம் காத்துக் கொண்டிருக்கிறது. இந்தச் சூழலில், எதிர்நோக்கியுள்ள தேர்தலை மிகக் கவனமாக கையாள வேண்டிய பொறுப்பு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் உள்ளது.



காங்கிரஸ் கட்சி அந்த மாபெரும் பொறுப்பை சரியாக உணர்ந்துள்ளதா என்கிற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. 60 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத போதும் தொடர்ந்து காங்கிரஸ் கொடியை,ஒவ்வொரு ஊரிலும் பெருமையோடு கையில் ஏந்தியிருக்கும் காங்கிரஸ் தொண்டர்களின் உணர்வுகளையும், மதவாத,பிரிவினைவாத சூழ்ச்சிக்கு அடிபணியாமல் சமூக நீதி,சுயமரியாதை, மாநில உரிமைகளுக்காகப் போராடுவதில் உறுதியோடு இருக்கும் நமது தமிழக மக்களையும் நாம் கைவிட்டு விடக்கூடாது. தமிழக காங்கிரசில், எவ்வித கட்டுப்பாடுமற்று தொடரும் உட்கட்சிப் பிரச்னைகள் மிகுந்த மனச்சோர்வை ஏற்படுத்துகிறது.


சித்தாந்த ரீதியான அரசியலை காத்திரமாக முன்னெடுக்காமல், மக்கள் பிரச்னைகளைப் பற்றிப் பேசாமல், வெறும் கூட்டல் கழித்தல்களை மட்டுமே செய்து கொண்டு, ஒரு சிலரின் சுயநலத்திற்காக தமிழக காங்கிரஸ் கொஞ்சம் கொஞ்சமாக அழிவின் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இதைத் தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது என்பதை உண்மையான காங்கிரஸ் தொண்டர்கள் உணர வேண்டிய நேரம் இது.


தலைவர் ராகுலின் தன்னலமற்ற, கொள்கைப் பிடிப்பு மிகுந்த, அச்சமற்ற அரசியலுக்கு நேர் எதிரான பாதையில் தமிழக காங்கிரஸ் சென்று கொண்டிருக்கிறது. அவரது கடின உழைப்பிற்கும்,ஒப்பற்ற தியாகத்திற்கும் நாம் துரோகம் செய்ய முடியாது. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு இருக்கும் அடையாளம், மரியாதை என்பது காமராசர் கட்டிக் காத்த பாரம்பரியத்திற்கும், நேரு, காந்தி குடும்பத்தின் தியாகத்திற்குமான தமிழக மக்களின், அன்பும், மரியாதையும் தான் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். இவ்வாறு ஜோதிமணி கூறியுள்ளார்.

செல்வப்பெருந்தகை பதில்

இது குறித்து காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியதாவது: அவர்கள் மாவட்டத்தில் அந்த உட்கட்சி பிரச்னை இருக்கிறது. அந்த மாவட்டத்தில் உட்கட்சி பிரச்னையில் தவறு நடந்து இருக்கிறது. அதற்கு எனது மனசாட்சிக்கு உட்பட்டு தீர்வு கண்டு இருக்கிறேன். நான் நடவடிக்கை எடுத்துவிட்டேன். அகில இந்திய தலைமை ஒப்புதலுக்காக காத்திருக்கிறேன். இந்த பதிவு ஏன் போட்டார்கள் என்று தெரியவில்லை. 24 மணி நேரமும் வேலை பார்க்கிறேன். கிராம கமிட்டி போட்டு இருக்கிறோம். அழிவின் பாதையில் இருந்து மீட்டெடுக்க தான் நாங்கள் இருக்கிறோம்.

அதிர்ச்சி

இவர்கள் பதிவிட்டு இருப்பது எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. இன்னொரு பக்கம் இதனை வேதனை என்று சொல்ல முடியாது? ஏன் இதை போட்டார்கள். என்னிடம் பேசி கொண்டு தான் இருக்கிறார்கள். பொதுவெளியில் ஏன் போட்டார்கள்? அவர்களிடம் பேசிவிட்டு சொல்கிறேன். அவர்களின் கோபம் நியாயமானது. நான் காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற பிறகு, அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கிறேன். அவர்கள் கருத்துகள் ரொம்ப ஆச்சரியமாக உள்ளது. இவ்வாறு செல்வபெருந்தகை கூறினார்.

Advertisement