'ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான்' சி.ஐ.டி., நிறுவனம் சாதனை

சென்னை: தேசிய ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டியில், சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி நிறுவனம், முதலிடத்தை பெற்று சாதித்துள்ளது.

மத்திய புத்தாக்க துறை மற்றும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., சார்பில், பல்வேறு துறைகள் சார்ந்த பிரச்னைகளுக்கு, தொழில்நுட்ப தீர்வுகளை காண, 'தேசிய மெகா ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான்' என்ற போட்டி நடத்தப்பட்டது.

இதன் இறுதிப்போட்டியில், சி.ஐ.டி., எனும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி நிறுவனத்தில் இருந்து, மென்பொருள் பிரிவில் 8, வன்பொருள் பிரிவில் 6 என மொத்தம் 14 அணிகள், இறுதிப்போட்டியில் பங்கேற்றன.

அவற்றில், மென்பொருள் பிரிவில் 5; வன்பொருள் பிரிவில் 4 என, மொத்தம் ஒன்பது அணிகள் வெற்றி பெற்றன. இதனால், தேசிய அளவில் அதிக வெற்றியாளர்களைப் பெற்ற நிறுவனமாகவும், 13 லட்சம் ரூபாய் பரிசு பெற்ற நிறுவனமாகவும் சி.ஐ.டி., தேர்வாகி சாதனை படைத்தது.

மேலும், ஹேக்கத்தானின் வன்பொருள் பிரிவில் இடம்பெற்ற, 60 ஒருங்கிணைப்பு மையங்களில் ஒன்றாகவும் பங்கேற்றது.

இறுதிப் போட்டியாளர்கள் மற்றும் வெற்றியாளர்களுக்கு, நேற்று சி.ஐ.டி.,யில் பாராட்டு விழா நடந்தது. அதில், ஏ.ஐ.சி.டி.இ.,யின் தலைவர் சீதாராம், டி.சி.எஸ்., நிறுவனத்தின் கல்விப் பிரிவு தலைவர் சுசீந்திரன், சி.ஐ.டி., நிறுவனத்தின் செயலர் ஸ்ரீதேவி, தலைவர் ஸ்ரீராம், முதல்வர் ரமேஷ் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

Advertisement