'வாங்க பாஸ்...' சம்பாதிப்பது ஈஸி!

கோவை, தடாகம் ரோட்டில் உள்ள இடையர்பாளையம் பகுதியில் செல்லப்பிராணிகள் ஷாப் நடத்தி, பப்பி இனப்பெருக்கம், பயிற்சி, குரூமிங் என, சகல பணிகளையும் ஒருசேர கவனித்து வரும் ராம்கி கூறியது:


செல்லப்பிராணிகளுக்கான சேவை துறையில் 15 ஆண்டுகளாக உள்ளேன். கோவிட் தொற்றுக்கு பின், இத்துறை வளர்ச்சி அடைந்துள்ளது. நிறைய பேர் பப்பி வளர்க்க ஆசைப்படுகின்றனர். நிறைய கண்காட்சிகள் நடப்பதால், மக்களால் சிறந்த ப்ரீடரை அடையாளம் காண முடிகிறது. பப்பிகளுக்கான அனைத்து சேவை சார்ந்த கடைகளும் அதிகரித்துள்ளன. இதனால், எல்லா சேவைகளும் மக்களுக்கு எளிதாக கிடைக்கிறது.


இதில், தற்போது வளர்ந்து வரும் துறையாக இருப்பது, குரூமிங், பேஷன் மற்றும் வாக்கிங் சர்வீஸ் சார்ந்த தொழில்களே. குரூமிங் செய்ய கற்று கொண்டால், பெரிய முதலீட்டில் தனியாக கடை போட முடியாத பட்சத்திலும், வாடிக்கையாளர்களின் வீட்டிற்கே நேரில் சென்று பப்பியை அழகுப்படுத்தலாம். இதேபோல வாக்கிங் சர்வீஸிற்கும் முதலீடு தேவையில்லை. ஆனால், இதற்கு பப்பியின் மனநிலை, அதன் ஆரோக்கியம் குறித்த, அனுபவ அறிவு அவசியம்.


வயதானவர்கள், பெண்கள், வேலைக்கு செல்வோர், பப்பியை வெளியில் அழைத்து செல்ல நேரம் ஒதுக்க முடியாதவர்கள், நல்ல வாக்கிங் சர்வீஸ் கிடைக்குமா என தேடுகின்றனர். காலை, மாலை ஒரு மணி நேரம், 'லீஸ்' அணிவித்து வாக்கிங் அழைத்து செல்வதில் பெரிய பலனில்லை. பப்பியின் மனநிலை புரிந்து, அதற்கு புதிய இடங்கள், புதிய மனிதர்கள், புதிய சூழலை அறிமுகப்படுத்துவது அவசியம். அப்போது தான் வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடைக்கும் பப்பி, உங்களை கண்டதும் தாவி குதித்து வரும். உரிமையாளருக்கும் உங்கள் சேவை மீது நம்பிக்கை வரும்.


குறிப்பிட்ட பகுதிகளில் இச்சேவை தொடங்கி பின் விரிவுப்படுத்தினால் நிறைய சம்பாதிக்கலாம். நடப்பதால் பப்பிக்கு மட்டுமல்ல, நம் ஆரோக்கியத்திற்கும் நல்லது தானே. ஆனால் முன் அனுபவம் இல்லாமல் களத்தில் குதித்தால் பப்பியிடம் கடி வாங்குவது உறுதி. செல்லப்பிராணிகள் சார்ந்த எந்த சேவை துறையாக இருந்தாலும், லாப நோக்கத்தை தாண்டி, அவைகளின் நலனில் கூடுதல் அக்கறை இருந்தால் மட்டுமே ஜொலிக்க முடியும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Advertisement