பொன்னேரி அரசு மருத்துவமனையில் சான்றிதழ் பெற மக்கள் அலைக்கழிப்பு

பொன்னேரி: பொன்னேரி அரசு மருத்துவமனையில் பிறப்பு, இறப்பு சான்றுகளை உரிய நேரத்தில் பெற முடியாமல், பொதுமக்கள் அலைக் கழிப்பிற்கு ஆளாகி வருகின்றனர்.

பொன்னேரி அரசு மருத்துவமனையில், 2018ல் இருந்து பிறப்பு, இறப்புகள் பதிவு செய்யப்பட்டு சான்று வழங்கப்படுகிறது. பொன்னேரி அரசு மருத்துவமனையில், ஒரு மாதத்திற்கு, 80 -100 மகப்பேறுகள் நடைபெறுகின்றன. குழந்தை பிறந்தவுடன் பெற்றோர் பெயருடன் சான்று கோரி விண்ணப்பிக்கின்றனர்.

அதேபோல, மருத்துவ சிகிச்சைக்கு வந்து இறப்பவர்களுக்கும் இறப்பு சான்று வழங்கப்படுகிறது. உரிய ஆவணங்களுடன் கணிணியில் பதிவேற்றம் செய்த பின், சான்று கோரி விண்ணப்பித்தவர்கள், 'ஆன்லைன்' மூலம் பிறப்பு, இறப்பு சான்றுகளை எளிதாக பெற முடியும்.

இந்நிலையில், பொன்னேரி அரசு மருத்துவமனையில், இரண்டு மாதங்களாக பிறப்பு, இறப்பு சான்றுகளை உரிய நேரத்தில் பெற முடியாமல் மக்கள் அலைக்கழிப்பிற்கு ஆளாகி வருகின்றனர். சான்றிதழுக்காக மருத்துவமனை செல்லும்போதெல்லாம், 'சுகாதார ஆய்வாளர் இல்லை' எனக்கூறி, மக்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர். இதனால், பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.

எனவே, மாவட்ட நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுத்து, பிறப்பு, இறப்பு சான்றுகளை உடனுக்குடன் வழங்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Advertisement