ஏமனில் பிரிவினைவாத அமைப்புகளின் முகாம்கள் மீது சவுதி வான்வழி தாக்குதல்

சனா: மேற்காசிய நாடான ஏமனில், தனிநாடு கோரிக்கை வலுப்பெற்றதை அடுத்து, உள்நாட்டு போர் மூண்டது. இதையடுத்து, ஏமனின் வடக்கு பகுதியை ஈரான் ஆதரவு ஹவுதி படையினர் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தெற்கு பகுதியில், சவுதி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆதரவுடன் ஏமன் அரசு ஆட்சி புரிந்தது.

இந்நிலையில், தெற்கு ஏமன் தனிநாடாக பிரிய வேண்டும் என்பதை வலியுறுத்தி, எஸ்.டி.சி., எனப்படும் தெற்கு இடைக்கால கவுன்சில் என்ற பிரிவினைவாத அமைப்பு உருவானது. இந்த அமைப்புக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆதரவு வழங்கி வருகிறது.

சவுதி எல்லைக்கு அருகே, ஹத்ரமவுத் மற்றும் மஹ்ரா என்ற எண்ணெய் வளமிக்க இரு மாகாணங்களை எஸ்.டி.சி., கைப்பற்றியது.

இதைத் தொடர்ந்து, ஹத்ரமவுத் மாகாணத்தில் உள்ள எஸ்.டி.சி., அமைப்பின் முகாம்கள் மீது சவுதி போர் விமானங்கள் குண்டுகள் வீசி நேற்று தாக்கின.

இதனால் ஆத்திரமடைந்த எஸ்.டி.சி., அமைப்பினர், ஏமனின் முக்கிய விமான நிலையமான ஏடன் சர்வதேச விமான நிலையத்தின் செயல்பாடுகளை முடக்கினர். மேலும், சவுதி துாதுக்குழு வந்த விமானத்தையும் தரையிறங்க விடாமல் தடுத்தனர்.

சவுதி நடத்திய தாக்குதலை தொடர்ந்து, ஏமனில் எஞ்சியிருக்கும் படைகளை திரும்ப பெறுவதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அறிவித்துள்ளது. மேலும், பிரிவினைவாதிகளுக்கு எவ்வித ஆயுதங்களையும் தாங்கள் வழங்கவில்லை என்றும் மறுப்பு தெரிவித்துள்ளது.

Advertisement