ஓட்டுப்பதிவு இயந்திரம் மீது கர்நாடகா மக்கள் நம்பிக்கை

பெங்களூரு: கர்நாடகாவில் தேர்தல் ஆணையம் நடத்திய ஆய்வில், 85 சதவீதம் மக்கள், மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரத்தின் மீது, நம்பிக்கை வைத் துள்ளது தெரியவந்துள்ளது.

லோக்சபா தேர்தல்களில், பா.ஜ., தொடர்ந்து வெற்றி பெற்று வருவதால், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்திருக்கலாம் என, எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.

இந்நிலையில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து, கர்நாடகாவில் தேர்தல் கமிஷன் ஆய்வு நடத்தியது. இதற்காக, பாலசுப்ரமண்யன் என்பவர் நடத்தும் அரசு சாரா தொண்டு அமைப்பின் உதவியை நாடியது.

அந்த தொண்டு அமைப்பும், பல்வேறு தொகுதிகளில் ஆய்வு நடத்தி, தேர்தல் ஆணையத்திடம் அறிக்கை அளித்தது. அதில், மாநிலத்தின் 85 சதவீதம் மக்கள், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் மீது, நம்பிக்கை இருப்பதாக தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக, காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயின் மகனும், மாநில காங்., அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சருமான பிரியங்க் கார்கேயின் சொந்த மாவட்டமான கலபுரகியில், 94.8 சதவீதம் மக்களும், முதல்வர் சித்த ராமையாவின் சொந்த மாவட்டமான மைசூரில், 88.59 சதவீதம் மக்களும், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மீது நம்பிக்கை இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இது குறித்து, பிரியங்க் கார்கே கூறுகையில், ''மத்திய தேர்தல் ஆணையம், மின்னணு ஓட்டுப்பதிவு குறித்து மக்களின் கருத்துகளை கேட்கும்படி மாநில தேர்தல் ஆணையத்திடம் கேட்டுக்கொண்டது.

''இதன்படி இந்த பொறுப்பை, பாலசுப்ரமண்யன் நடத்தும் என்.ஜி.ஓ.,விடம் ஒப்படைக்கப்பட்டது. பாலசுப்ரமண்யன், பிரதமர் மோடி குறித்து புத்தகம் எழுதியவர்.

''பிரதமரின் அலுவலகத்தில் பணியாற்றுபவர். இவரிடம் வேறு எப்படிப்பட்ட அறிக்கையை எதிர்பார்க்க முடியும்,'' என்றார்.

Advertisement